கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக கூட்டணியினர் ஆப்பு வைத்ததாகவும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் தோற்க அதிமுகவின் உள்ளடி வேலைகள் தான் காரணம் என்று பாஜக மாநில துணை தலைவர் சிவபாலன் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பாஜக மாவட்ட இளைஞர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பாஜக மாநில இளைஞர் அணி துணை தலைவர் சிவபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது பேசிய சிவபாலன்,  கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதன் காரணமாகவே பாஜக 5 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. குறிப்பாக அதிமுக கட்சியினரின் உள்ளடி வேலையால் தான் நாங்கள் எங்களது கன்னியாகுமாரி தொகுதியில்  தோல்வி அடைந்தோம்.

கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக கூட்டணி கட்சியினர் நமக்கு ஆப்பு வைத்துள்ளனர் என அவர் கூறினார். எனவே சட்டப்பேரவை தேர்தலில் நாம் தனித்தே போட்டியிட வேண்டும் அதற்கான தேர்தல் பணிகளை நாம் உடனடியாக துவங்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதோடு மட்டும் அல்லாமல் அதிமுகவின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார். கன்னியாகுமரி சிவபாலன் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மிகவும் நெருக்கமானவர். மாநில அளவில் பொறுப்பு வகிப்பவர். அவர் வெளிப்படையாக தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு அதிமுக மற்றும் பாஜகவினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் கன்னியாகுமரியில் நாம் ஜெயித்திருக்க முடியும் என்று பாஜகவினர் அப்போது முதல் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பாஜகவினருடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்ததாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால் இதனை பெரும்பாலும் பொதுவெளியில் பேசாமல் தங்களுக்குள் புலம்பி வந்தனர். ஆனால் இந்த விஷயத்தை பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அத்தோடு சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை ஆமோதிக்கும் வகையில் அக்கட்சி நிர்வாகிகளும் உற்சாக குரல் எழுப்பினர். இதற்கிடையே பாஜக – அ திமுக இடையிலான உறவு கடந்த சில மாதங்களாகவே கசப்பாகிக் கொண்டே செல்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தங்களுடன் கூட்டணி அமைப்பதை அதிமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்தே பாஜகவினர் அதிமுகவிற்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.