சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்புகளை பதிவு தெரிவித்தனர்.
சொத்து வரி உயர்வு
தமிழகத்தில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீத உயர்வும், 601 - 1,200 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் உயர்வு என்றும், 1,201- - 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்வு, 1,800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு, 100 சதவீதம் உயர்வு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்ககு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தநிலையில் சட்டப்பேரவை கூட்டமானது இன்று தொடங்கியுள்ளது. இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கபடவுள்ளது.

வீட்டு வாடகை உயர்கிறது
முன்னதாக சொத்து வரி உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு திர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சொத்து வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்த அமைச்சர் நேருவின் விளக்கம் திருப்தி அளிக்கவில்யையென கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தது. வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டு காலமாக கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழலில் சொத்து வரி உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக வீட்டு வாடகை கட்டணம் அதிகமாக கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதாக தெரிவித்தார்.

நியாயப்படுத்தும் முதலமைச்சர்
முதலமைச்சரான ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது சொத்து வரியா? சொத்தை பறிக்கும் வரியா என பேசியவர், தற்போது சொத்து வரி உயர்வை நியாயப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். திமுக அரசு பதவியேற்றுள்ள 10 மாத காலத்தில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லையென எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இந்த சொத்து வரி உயர்வு மூலமாக மக்களிடையே மிகப்பெரிய சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு 15 வது நிதி ஆண்டில் வரி விதிப்பு முறைப்படுத்த வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறது என்றும் வரியை உயர்த்த வேண்டும் என்று கூறவில்லையென தெரிவித்தார். எனவே சொத்து வரியை குறைக்காத தமிழக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்திருப்பதாக கூறினார்.
