நீட் தேர்வு மசோதா தொடர்பாக தமிழக ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காத காரணத்தால் தமிழக ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் விருந்தில் பங்கேற்கின்றன.
ஆளுநரிடம் நீட் மசோதா
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறியும்,ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருப்பதன் காரணமாக மருத்துவ படிப்பு படிக்கமுடியாமல் பாதிக்கப்படுவதாக கூறி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார். இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றிருந்த போது பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து நீட் தேர்விற்கு விலக்கு தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

விருந்தை புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்
இதனையடுத்து தமிழக ஆளுநர் ரவியை, கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நீட் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். தமிழக ஆளுநரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இந்தநிலையில் நீட் தேர்வு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லையென திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால் ஆளுநர் சார்பாக நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்தது.

அதிமுக- பாஜக பங்கேற்பு
இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இதில் அதிமுக சட்டமன்ற கொறாடா எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இதே போல பாஜகவினரும் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த தேநீர் விருந்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள பாரதியார் சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளையும் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
