2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார்.சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். 

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்;- அமித்ஷா சிறந்த நிர்வாகி. ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவில் அதிமுக அரசு முதலிடத்தில் உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிக்கனியை பறித்து, மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இனி வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும். தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என கூறினார்.