முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வலது கரம் போல் செயல்பட்டு வருபவர் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க குழு அமைத்திருந்தாலும் கூட, பா.ஜ.கவுடன் தங்கமணி தான் பேசிக் கொண்டே இருந்தார். அதுவும் தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலுடன் தங்கமணிக்கு நெருக்கம் அதிகம். ஏனென்றால் மத்திய மின்துறை அமைச்சராக இருப்பவர் பியூஸ் கோயல்.

அந்த வகையில் ஏற்கனவே பல முறை பியூஸ் கோயலுடன் தங்கமணிக்கு அறிமுகம் அதிகம். மேலும் தங்கமணி டெல்லி செல்லும் போதெல்லாம் பியூஸ் கோயலை சந்திக்காமல் திரும்புவதில்லை. தற்போதைக்கு மோடிக்கு அமித் ஷாவிற்கு பிறகு மிகவும் நம்பிக்கைக்கு உரிய நபர் பியூஸ் கோயல் தான் என்கிறார்கள். அது தான் ரயில்வே துறை எனும் மிக முக்கியமான துறை பியூஸ் கோயலுக்கு வழங்கப்பட்டது.

அதுமட்டும் அல்லாமல் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கேபினட்டில் 3வது இடத்தில் இருக்க கூடியவர். அவர் சிகிச்சைக்கு சென்ற போது நிதி அமைச்சக பொறுப்புகளை கவனிக்கும் பொறுப்பும் பியூஸ் கோயலிடம் வந்து சேர்ந்தது. அந்த அளவிற்கு செல்வாக்கான பியூஸ் கோயலிடம் நெருக்கமாக இருப்பதன் மூலம் தமிழக அரசு பல்வேறு காரியங்களை சாதிக்கவும் தங்கமணி உதவியுள்ளார். 

அந்த வகையில் கடந்த ஒரு மாதமாகவே டெல்லி செல்லும் போதெல்லாம் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணி குறித்து பேசியுள்ளார் தங்கமணி. இறுதியாக கடந்த வாரம் அவர் சென்னை வந்த போதும் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் வைத்து பேசி கூட்டணியை ஏறக்குறைய தங்கமணி உறுதிப்படுத்தியுள்ளார். இதன் பிறகு சில கருத்து வேறுபாடுகளை முதலமைச்சரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி கூட்டணிக்கான கதவை திறந்துள்ளார் தங்கமணி.

 

இறுதியாக யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதையும் கூட 99 சதவீதம் முடித்துள்ளார் தங்கமணி. ஆனால் அந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டால் கட்சியில் குழப்பம் வரும் என்பதால், அதனை மட்டும் சிறிது நாட்கள் தள்ளிப்போட வேண்டும் என்கிற முடிவையும் பா.ஜ.கவை ஏற்க வைப்பதில் தங்கமணி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் உருவாகியுள்ள பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கான சூத்திரதாரியாக தங்கமணியையும், பியுஸ் கோயலையுமே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.