அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்றும் பாஜக தன்னை திருத்திக் கொண்டால் தமிழ்நாட்டில் வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்றும் பாஜக தன்னை திருத்திக் கொண்டால் தமிழ்நாட்டில் வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லது இல்லை என்றும் பொன்னையன் பேசியதாக வெளியான தகவலை அடுத்து பாஜக திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பாஜக கூட்டணியை அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது ஆனாலும் எதிர்வரும் நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிடும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியிலிருந்தாலும் தனக்கென தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக வினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் பாஜகவே பிரதான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவை காட்டிலும் அவர் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் அடுத்து வரும் தேர்தல்கள் பாஜக திமுக என்ற சூழ்நிலையை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் சமீபத்தில் அம்மா பேரவை சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் பாஜகவை கடுமையாகச் சாடியதாக தகவல் வெளியானது. அதாவது, காவிரி முல்லைப் பெரியாறு மேகதாது என அனைத்துப் பிரச்சினைகளிலும், பாஜக தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை அதேபோன்று அதிமுகவை வைத்து பாஜக முயற்சித்து வருகிறது அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டதாக தொடர்ந்து பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர், தமிழகத்தில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல, அது தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல என்று பொன்னையன் பேசியதாக தகவல்கள் வெளியானது. இது அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அண்ணன் பொன்னையனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து எனக்கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் பிரபல ஊடகமொன்றுக்கு அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் சர்ச்சையை ஏற்படுத்திய அவரின் பேச்சு குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, கட்சியின் ரகசிய கூட்டத்தில் நான் பேசிய பேச்சு வெளியே திரித்துக் கூறப்பட்டு இருக்கலாம், உண்மை நிலை என்னவென்றால் நீட் தேர்வுக்கு எதிரான பாஜக இந்தியைத் திணித்து தமிழ்மொழி கலாச்சாரத்தை சிதைக்க நினைக்கும் பாஜக, நீர்நிலை விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் பாஜக, மாநில உரிமைகளை தட்டிப் பறிக்கும் பாஜக, ஜிஎஸ்டி கொண்டுவந்து நிதி அதிகாரத்தை டெல்லியில் குவித்து மாநில அரசுகளை பஞ்சாயத்து போல நடத்தி வரும் பாஜக, ஈழத்தமிழர்களை கொன்று சிங்கள அரசுக்கு உறுதுணையாக நிற்கும் பாஜக, தமிழ்நாட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் எதையும் செய்ய முடியும் என்பதைப் பற்றி மட்டும் யோசிப்பதே இல்லை, தங்களது கொள்கைகளை மாற்றி தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து திட்டங்களைத் தீட்டி செயல்படுவார்கள் என்றால், தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடையும் இதுதான் எதார்த்த உண்மை.

ஆனால் தமிழக விரோத கொள்கையுடன் பாஜக செயல்படுமேயானால் அதிமுகவுக்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே நல்லதல்ல எனக் கூறியுள்ளார். ஆனாலும் அதிமுக இன்னும் பாஜகவுடன் கூட்டணியில் தொடர்கிறதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார் அவர், நான் சொன்னது அனைத்துமே தமிழ்நாட்டு மக்களின் நலனை கருதி தான், பாஜக தனது கொள்கையை மாற்றிக் கொண்டால் நல்லது என்கிற அடிப்படையில் கூறிய கருத்தே ஒழிய வேறில்லை. ஆனால் இதற்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை, நல்ல உறவோடு கூட்டணி தொடர்கிறது என அவர் கூறியுள்ளார்.
