தமிழக அரசை பி.ஜே.பி.தான் நடத்துகிறது! அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள்!...என்று கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக விமர்சனம் வெளுத்துகட்டுகிறது. தமிழகத்தின் எதிர்கட்சிகள் மட்டுமில்லாது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் என்று அக்கம்பக்க மாநில பேர்வழிகளே கழுவி ஊற்றும் நிலையில்தான் சூழல் இருக்கிறது. 

டெல்லி லாபியிடம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் அடிபணிந்து செல்ல காரணம், ’எதிர்த்தால் ரெய்டு நடக்கும் என்கிற பயம்! ரெய்டு நடந்தால் இதுவரையில் குவித்துள்ள சொத்துக்கள் பறிபோகும், சிறை செல்ல நேர்ந்தாலும் ஆச்சரியமில்லை எனும் நடுக்கம்! ஆட்சி கலைக்கப்பட்டு அதிகாரம் பறிபோகும் எனு அச்சம்! ஆகியவையே.’ என்கிறார்கள் விமர்சகர்கள். அதனால்தான் டெல்லி எவ்வளவுகுட்டினாலும், குனிந்து தலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது தமிழக அரசு! என்று அரசியல் பார்வையாளர்கள் வெளுக்கிறார்கள். 

ஆனால் அ.தி.மு.க. முக்கியஸ்தர்களின் இந்த போக்கில் கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் மாற்றம் துவங்கியுள்ளது! என்று ஆச்சரியப்படுகிறார்கள் அதே விமர்சகர்கள். மாற்றத்தின் காரணமாக அவர்கள் குறிப்பிடுவதும், உதாரணங்களாக அவர்கள் மேற்கோள் காட்டுவதும் இப்படி அமைகின்றன...“தமிழக அரசினை நிர்வகிக்கும் அதிகாரத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் பயந்தது பி.ஜே.பி.யை பார்த்து இல்லை. மாறாக, அதன் கையிலிருக்கும் அதிகாரத்தைப் பார்த்துதான். அவர்கள் நினைத்தால் வருமான வரித்துறை, சி.பி.ஐ. என்று யாரையும் தங்கள் மேல் ஏவிவிட முடியும் என்கிற அச்சமே, அடிபணிதலுக்கு அடித்தளமாக இருந்தது. 

ஆனால், கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன் வெளியான ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்த அச்சத்தை பெருமளவில் குறைத்துள்ளன. அதாவது ஐந்து மாநில தேர்தல்களில் மிகப்பெரிய சரிவையும், அடியையும் வாங்கிக் கட்டியுள்ளது பி.ஜே.பி. மோடியின் அலை முடிந்ததா? என்று விமர்சனங்கள் வெடிக்குமளவுக்கு சூழல்கள் மாறிவிட்டன. மோடிக்கு ஆதரவு நிலை கொடிகட்டிப் பறந்த வட நாட்டிலேயே இந்த அடியென்றால், மோடியை தினம் தினம் தூற்றித் தள்ளும் தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு எந்தளவுக்கு பி.ஜே.பி.க்கு சரிவை தரும்! என்று யோசிக்க துவங்கிவிட்டார்கள். 
 
இந்த திடீர் இமாலய சரிவை பி.ஜே.பி.யும் எதிர்பார்க்கவுமில்லை, அதனை ஜீரணிக்கவும் முடியவில்லை. தலை சுற்றி நிற்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும். இந்த தடுமாற்றத்தை வெளிப்படையாக உணர்ந்துவிட்டுதான் தமிழ்நாட்டில் எடப்பாடியாரின் அமைச்சரவை பி.ஜே.பி.யை துணிந்து உரச துவங்கியுள்ளனர். தேசமெங்கும் பெரும்பான்மை மாநிலங்களில் எங்கள் ஆட்சி! என்று மார் தட்டிக் கொண்டிருந்த பி.ஜே.பி.யின் அதிகார பரப்பளவு சுருங்கிவிட்டது . ஆக பலவீனப்பட்டு நிற்கிறது பி.ஜே.பி. இந்த சூழலில் அவர்களை சாத்தினால்தான், நமது மரியாதையை சொந்த மாநிலத்தி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று திட்டமிட்டுள்ள அ.தி.மு.க. அதற்கு ஏற்றபடி மோடி தரப்பை தாக்க துவங்கிவிட்டது. 

அதன் வெளிப்பாடாகதான் எடப்பாடி அமைச்சரவை சகாக்கள் மோடி மற்றும் மத்திய அரசின் மீது பாய துவங்கியுள்ளனர்...‘பத்து லட்சம் பேர் இறந்தால்தான் பிரதமர் தமிழகத்துக்கு வருவாரா? கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட அவர் வராதது பெரும் வருத்தத்தை தருகிறது. அவரை வர்புறுத்தி தமிழக பி.ஜே.பி. அழைக்காமல் இருப்பது தவறு.’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கினார். 

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரையில் நிவாரணம் வழங்கவில்லை. தமிழக முதல்வர் பிரதமரை நேரில் வலியுறுத்தியும் இதுவரை நிதி வரவில்லை. கஜா புயல் நிவாரண நிதி பெற, தமிழக அரசிடமிருந்து அறிக்கை வரவில்லை! என மத்திய அரசு சொல்வது சரியான காரணமில்லை. முதலில் உத்தேசமாக நிவாரண தொகையை வழங்கிவிட்டு கூட அறிக்கையை பெறலாம்.’ என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டுத் தாக்கியுள்ளார்.

 

 ’பி.ஜே.பி.யின் வாக்கு வங்கிக்கு ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை! அவர்களின் தோல்விக்கு நாங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கெத்தாக கிண்டலடித்துள்ளார். ஆக யானை போன்ற பி.ஜே.பி.க்கு அடி சறுக்கியிருக்கும் நேரத்தை பயன்படுத்தி ‘எப்படியானாலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு நம்மிடம் இவர்கள் வரவேண்டும்!’ எனும் தைரியத்தில் தொடர்ந்து தாக்குகிறது அ.தி.மு.க!” என்கிறார்கள். என்ன ஒரு சாணக்கியத்தனம்!