அதிமுகவுடன் கூட்டணி... கடையை காலி செய்ய தயாராகும் தேமுதிக நிர்வாகிகள்...!
கூட்டணி குழப்பத்தால் கடையை காலி செய்துவிடலாம் என்று தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் முடிவு செய்துள்ளனர்.
கூட்டணி குழப்பத்தால் கடையை காலி செய்துவிடலாம் என்று தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்பது தேமுதிக நிர்வாகிகள் அனைவரது ஒட்டு மொத்த விருப்பம். ஆனால் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்தது. விட்டமின் ப என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று ஸ்டாலின் தரப்பு தேமுதிகவிடம் துவக்கத்திலேயே கூறிவிட்டது. இதனால் தான் திமுக கூட்டணிக்கு ஆர்வம் காட்டாமல் பிரேமலதா தொடர்ந்து அதிமுகவுடன் பேசி வந்தார்.
திமுக தரும் தொகுதிகளின் எண்ணிக்கையையே அதிமுக தரப்பும் தருவதாக கூறியது. ஆனால் திமுக தர மறுத்த விட்டமின் ப அதிகம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் பிரேமலதா பேச்சுவார்த்தையை நடத்தி வந்தார். ஆனால் பாமகவை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தாங்கள் தேமுதிகவில் இருக்கப்போவதில்லை என்று வடமாவட்ட தேமுதிக நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தினர்.
மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பணம் குறித்த பேச்சும் அடிபடுவது தேமுதிக நிர்வாகிகள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த முறையும் நடராஜன் கொடுத்த பணத்திற்காக தான் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததாக ஒரு பேச்சு இருக்கிறது. தற்போது பணத்திற்காக அதிமுகவுடன் கூட்டணி என்றால் நாங்கள் எல்லாம் யார் என்று வெளிப்படையாகவே தேமுதிக நிர்வாகிகள் பேச ஆரம்பித்துள்ளனர்.
இதனால் கேப்டன் மற்றும் பிரேமலதா வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் இரண்டு பேருடனும் பேச்சுவார்த்தை நடத்த ஆட்களை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திமுக கதவை சாத்திவிட்டதாக அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படியே கூட்டணி வைத்தாலும் பாமகவை விடஅதிக தொகுதிகள் இருந்தால் தான் தாங்கள் கவுரவமாக தேர்தல் வேலை பார்க்க முடியும் என்று தேமுதிக வட மாவட்ட நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
ஒரு வேலை அந்த அளவிற்கு தொகுதி கிடைக்கவில்லை என்றால் தினகரனுடன் கூட பேசலாம் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு வேளை கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் தேமுதிக பணம வாங்கிவிட்டது என்று பெயர் வந்தால் தேமுதிகவில் போட்டியிட வாய்ப்பு வாங்கிவிட்டு அப்படியே திமுகவில் இணைந்துவிடுவது என்று சிலர் முடிவு செய்துள்ளனர். இதனால் பிரேமலதா உள்ளிட்டோர் உச்சகட்ட நெருக்கடியில் உள்ளனர்.