ரஜினி ஆரம்பிக்கும் கட்சியின் அதிமுக கூட்டணி அமைக்குமா என்கிற கேள்விக்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்று கூறி புதிய பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ஜெயக்குமார்.

2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தமிழக அரசியலை அடுத்த 25 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கப்போகிறது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலை ஜெயலலிதா – கலைஞர் என இரண்டு பேர் ஆண்டு வந்தனர். அவர்கள் இருவருமே அடுத்தடுத்து காலமானதை தொடர்ந்து தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மூலம் ஸ்டாலின் தனது ஆளுமையை நிருபித்தார்.

ஆனால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கிடைத்த படு தோல்வி ஸ்டாலின் தலைமையை மீண்டும் கேள்வி எழுப்ப வகை செய்துவிட்டது. ஏன் அவருடைய அண்ணனான மு.க. அழகிரி கூட தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவருக்கு தற்போதும் வெற்றிடம் உள்ளது என்கிற ரஜினியின் கருத்தை ஆதரித்தார். அதோடு மட்டும் இல்லாமல் ரஜினி தான் தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவருக்கான வெற்றிடத்தை நிரப்புவார் என்றும் கூறிவிட்டுச் சென்றார். இந்த ஆளுமை யார் என்பதை தீர்மானிக்கப்போவது சட்டப்பேரவை தேர்தல் தான்.

அந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் தற்போதே ஒவ்வொரு கட்சியும் ஒரு வியூகம் வகுத்து வருகிறது. அந்த வகையில் ரஜினி தலைமையில் ஒரு மாபெரும் கூட்டணி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமை குறித்த கேள்வி வந்த போது தமிழகத்தில் வெற்றிடம் இல்லை அதை வெற்றி  இடமாக இடைத்தேர்தல் மூலமாக அதிமுக பெற்றுவிட்டது என்று பேசினார்.

ஆனால் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுக கூட்டணி அமைக்குமா என்று கேட்ட போது அவர் அளித்த பதில் தான் இதில் குறிப்பிடப்பட வேண்டியது. ஜெயக்குமார் தான் தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் மனம் அறிந்து அனைத்து விஷயத்திலும் பேசக்கூடியவர். அவர் கூட்டணி விவகாரம் குறித்து மிகவும் கவனமாகவே கருத்துகளை கூறக் கூடியவர்.

இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜெயக்குமார் ரஜினியிடன் கூட்டணி வைப்பீர்களா என்கிற கேள்விக்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறியிருப்பது தமிழகஅரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.