சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி அதிமுக கூட்டணிக்கு வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மனதில் வைத்து தான் என்கிறார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாற்றம் தொடர்பான தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வருகின்றன. கூட்டணியில் மாற்றம் இருப்பதை இருபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை ஒப்புக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு வாபஸ் முடிந்த பிறகு தான் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதே போல் அதிமுகவிலும் கூட தங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும் என்று ஆரம்பம் முதலே தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று தெரிவித்தார். வழக்கம் போல் அனுமானமாக கூறாமல் திட்டவட்டமாக ஜெயக்குமார் இந்த கருத்தை கூறினார். இதனால் அவர் எந்த கட்சியை மனதில் வைத்து கூட்டணி குறித்து பேசினார் என்கிற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே அண்மைக்காலமாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அதிமுக அரசு மீது பெரிய அளவில் விமர்சனங்கள் முன்வைப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் அதிமுக அரசின் சில செயல்களை அவர் வெளிப்படையாக பாராட்டவும் செய்கிறார்.

உதாரணமாக அண்ணா பல்கலைக்கழக உயர் சிறப்பு அந்தஸ்து தங்களுக்கு தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்ததை வெளிப்படையாக திருமாவளவன் பாராட்டினார். இந்த பாராட்டு ட்வீட்டை அதிமுகவின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப பிரிவு மட்டும் அல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிஆர் ஓ டீமும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்தனர். இதே போன்று விசிக தொடர்புடைய பல்வேறு விஷயங்களில் அதிமுக அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு வரும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். கடைசியாக 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் அந்த கட்சி மண்ணை கவ்வியது. கடந்த முறை மக்கள் நலக்கூட்டணி என்று போட்டியிட்டு மண்ணை கவ்வினார் திருமா. இதனால் மறுபடியும் திமுக கூட்டணியில் அவர் ஐக்கியமாகியுள்ளார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் கொடுத்ததை சுட்டிக்காட்டி விசிகவிற்கு மிக மிக குறைவான தொகுதிகளையே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இதே போல் வட மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரும் விசிக நம் கூட்டணிக்கு வேண்டாம் என்று கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தி வருவதாக சொல்கிறார்கள். இதனால் திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில் ஐந்து முதல் 6 தொகுதிகள் கொடுத்தாலே பெரிது என்கிறார்கள். இதனை உணர்ந்து தான் தேர்தலுக்கு வேறு சில வியூகங்களையும் திருமா வகுத்து வருவதாக சொல்கிறார்கள். அதில் மிக முக்கியமானது அதிமுக கூட்டணி. கடந்த முறையை போல் 10 தொகுதிகள் கொடுத்தால் போதும் அதிமுக கூட்டணியில் திருமா ஐக்கியமாக வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

அதே சமயம் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் பாஜக கட்சிகள் அந்த கூட்டணியில் இடம்பெறாது என்றும் எனவே விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளுடன் கூட்டணியில் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் போட்டியிடும் தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதே நிபந்தனையை தான் திமுகவும் விதித்து வருவதால் அதனை ஏற்பது திருமாவிற்கு பெரிய சிக்கலாக இருக்காது என்கிறார்கள். ஏனென்றால் 2006 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக விசிகவிற்கு மிக மிக சொற்ப தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது.

ஆனால் அதிமுக வழங்கிய 10 தொகுதிகளுக்காக அந்த கூட்டணியில் திருமா போட்டியிட்டார். அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை அதிமுக தங்களுக்கு தலை வாழை இலையில விருந்து வைக்கும் போது திமுக போடும் எச்சில் சோறு எதற்கு என்று கூறியிருந்தார். அதே போன்ற ஒரு சூழல் தான் தற்போதும் இருப்பதாக கூறுகிறார்கள்.