அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு பாமக மற்றும் தேமுதிக கட்சிகளின் செயல்பாடு எடப்பாடி பழனிசாமிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கே எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. ஓபிஎஸ் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பிறகு அனைத்தும் சுபம் என்றே எடப்பாடி பழனிசாமி நம்பினார். ஆனால் அதன் பிறகு கட்சியில் பிரச்சனை முடிந்தாலும் கூட்டணியில் பிரச்சனை உருவாகியுள்ளது. அதாவது, அதிமுகவிற்கு வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கலாம், ஆனால் கூட்டணிக்கு அவர் இல்லை என்கிற ரீதியில் பாஜக பேச ஆரம்பித்தது.

வழக்கமாக எடப்பாடி பழனிசாமி சாதாரண அறிவிப்பை வெளியிட்டால் கூட அதை உலக மகா அறிவிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கொண்டாடி தீர்த்துவிடுவார். ஆனால் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு சாதரண வாழ்த்து கூட தற்போது வரை ராமதாஸ் தெரிவிக்கவில்லை. இதே போல் தேமுதிக தரப்பில் இருந்தும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடிக்கு சாதகமான எந்த அறிவிப்பும் வரவில்லை. சரி, வாழ்த்து தான் கூறவில்லை துக்கம் விசாரிக்க கூட கூட்டணியின் முக்கிய தலைவர்கள் வராதது தான் எடப்பாடியை குழப்பம் அடைய வைத்துள்ளது.

அதாவது எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட நேரில் சந்தித்து துக்கம் விசாரித்துவிட்டார். இதே போல் அதிமுகவின் எதிர்முகாமில் உள்ள கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வரிசையாக சென்று எடப்பாடியை சந்தித்து துக்கம் விசாரித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாசோ, இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணியோ எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இதே போல் தேமுதிகவில் இருந்தும் கூட எல்.கே.சுதீஷ் மட்டுமே வந்தார். பிரேமலதா முதலமைச்சர் எடப்பாடியை சந்திக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இப்படி ஒரு சூழலை அதிமுக தற்போது தான் எதிர்கொண்டுள்ளது. இதற்கு முன்பாக அனைத்து முக்கிய விஷயங்களிலும் அதிமுகவிற்கு பாமக, தேமுதிக கட்சிகள் பக்க பலமாகவே இருந்துள்ளன. இடைத்தேர்தல்களில் கூட நிபந்தனை அற்ற ஆதரவை கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு வழங்கின. ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அந்த கட்சிகள் அதிமுகவிடம் இருந்து விலக நிற்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது கூட்டணிக்கான பேரத்தை அதிகரிப்பதற்கான ஒரு திட்டமாகவே சிலர் கூறுகின்றனர்.

ஆனால் முதலமைச்சரை சந்தித்து துக்கம் விசாரிப்பதில் கூடவா கூட்டணி வியூகம் என்றும் கேள்விகள் எழுகின்றன. எந்த சூழலிலும் அதிமுகவுடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று பாமகவும், தேமுதிகவும் நினைப்பதாக கூறுகிறார்கள். நெருக்கத்தை தவிர்க்கும் பட்சத்தில் வேறு சில கூட்டணி ஆப்சன்களும் தங்களுக்கு இருக்கும் என்றும் அந்த கட்சிகள் கருதலாம். எனவே தான் தேர்தல் நெருங்குவதால் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடியுடன் நெருக்கத்தை இரண்டு கட்சிகளுமே தவிர்ப்பதாக கூறுகிறார்கள்.