முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழியனுப்ப, சென்னை விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த அதிமுக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் நடைபெற உள்ள வனக் காப்பாளா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். எனவே, கோவை செல்வதற்காக இன்று மதியம் சென்னை விமான நிலையத்துக்கு முதல்வர் பழனிசாமி வந்தார். அப்போது அவரை வழியனுப்புவதற்காக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் விமான நிலையம் வந்தனர். விமான நிலையம் உள்ளே செல்லும்போது அனைவரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் என்பவரை சோதனையிட்ட போது, அவர் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி வைத்திருப்பதை அவரே முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மீனம்பாக்கம் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தமிழக முதல்வர் பயணம் செய்யவுள்ள நேரத்தில் இதுபோன்று துப்பாக்கி எடுத்து வருவது குற்றம் என்பது தமக்கு தெரியாது என்று கூறிய அவர், துப்பாக்கியை பயன்படுத்துவதற்காக உரிய சான்றிதழ் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சான்றிதழை காண்பிக்கும்படி அதிகாரிகள் கேட்ட நிலையில், அவர் தற்போது தம்மிடம் இல்லை என்றும், விரைவில் அதனை காண்பிப்பதாகவும் ஜீவானந்தம் பதில் தெரிவித்தார். அப்படி இருந்த போதிலும் முதலமைச்சரை பார்க்க வரும்போது, அதை எடுத்து வர வேண்டிய அவசியம் என்ன என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.