விவசாயிகளை மோசடியில் இருந்து பாதுகாக்கவும், அவர்களின் நலனுக்காகவுமே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். சட்டங்களின் நன்மைகளை எதிர் வரும் நாட்களில் விவசாயிகள் நிச்சயம் அனுபவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் அங்கு ராஜாதலாப்  பகுதியிலிருந்து  பிரயாஜ் ராஜ் ஹாண்டியா  இடையே சுமார் 2447 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் அப்போது அவர் ஆற்றிய உரை பின்வருமாறு: 

வாரணாசி சுதந்திரத்திற்கு பின் இதுவரை செய்யப்படாத புதிய நெடுஞ்சாலை திட்டங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளது.  போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வரானதிலிருந்து மாநிலத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களில் மேலும் 12  விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது,

அதேபோல் இங்கு விவசாய கட்டமைப்புகளுக்கு 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எளிதாக சேமித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வாரணாசியில் சரக்கு மையம் நிறுவப்பட்டுள்ளதன் மூலம் அது சாத்தியமாகியுள்ளது என்றார். அதேபோல் தற்போது வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது, அதுமட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் பேரணியில் ஈடுபட்டு வருககின்றனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  பிரதமர் மோடி வேளாண் திருத்த சட்ட மசோதாவையும், அதன் நன்மைகளை விளக்கும் வகையிலும் உரையாற்றியுள்ளார். 

அதாவது, புதிய வேளாண் திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும், சட்ட பாதுகாப்பையும்  அளித்துள்ளது. அதில் விவசாயிகளின் நலனுக்காக பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும், ஒரு விவசாயி தனது விளைபொருட்களுக்கு சிறந்த  விலையையும் வசதிகளையும் கொடுப்பவர்களுக்கு நேரடியாக அதை விற்க சுதந்திரம் பெற வேண்டாமா.? என கேள்வி எழுப்பியுள்ளார். சுவாமிநாதன் கமிஷன் படி விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான எம்.எஸ்.பி வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது, இந்த வாக்குறுதி காகிதத்தில்  நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் எட்டியுள்ளது. முழுக்க முழுக்க விவசாயிகள் அரசியல் கட்சிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள், பல ஆண்டுகளாக விவசாயிகளை ஏமாற்றி வஞ்சித்துவருபவர்களே தற்போதும் இந்த போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். 

முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டங்களையும், அதன் நன்மைகளை விவசாயிகள் எதிர்வரும் நாட்களில் அனுபவிப்பார்கள் என மோடி கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், இன்று மாலை வாரணாசி கங்கை நதிக்கரையில் தீபங்களை ஏற்றி வைக்கும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். தொடர்ந்து கங்கை நதியில் படகுப் பயணம் மேற்கொள்கிறார். காசி விசுவநாதர் கோவிலில் வழிபடுகிறார். பிரதமர் மோடியுடன் தேவ் தீபாவளி பண்டிகையில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதன் பிறகு இரவு 9 மணிக்கு பிரதமர் டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.