விவசாயத்தை அழித்தொழிக்கும் பாஜக அரசின் சட்டத்தை ஆதரிக்கும் எடப்பாடியார் அவர்கள் தம்மை ஒரு பாஜகவின் அனுதாபி எனக்கூறிக் கொள்ளலாமே தவிர விவசாயி என சொல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாராதி கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 

பாஜகவின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும்,பாஜகவிவின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி - வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன. அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரவு தெரிவித்தனர். மூச்சுக்கு 300 தடவை நானும் விவசாயி என்று சொல்லிக்கொண்டே முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதா என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாராதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விவசாயி ஒருபோதும் 1000 முறை தம்மை விவசாயி என சொல்லிக் கொள்வதில்லை. மேலும் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவேன் என விவசாயிகளைப் பார்த்து ஒரு விவசாயி சொல்லிக் கொண்டதுமில்லை.

விவசாயத்தை அழித்தொழிக்கும் பாஜக அரசின் சட்டத்தை ஆதரிக்கும் எடப்பாடியார் அவர்கள் தம்மை ஒரு பாஜகவின் அனுதாபி எனக்கூறிக் கொள்ளலாமே தவிர விவசாயி என ஒருமுறை சொன்னாலும் ஓராயிரம் முறை சொல்லிக் கொண்டாலும் அது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மிகப்பெரிய அவமானம்தான் கே.பாலபாரதி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.