செய்தியாளர்கள் சந்திப்பின் போது எதுவும் பேசக்கூடாது என்று கூறியே விஜயகாந்தை பிரேமலதா அழைத்து வந்துள்ளார்.

சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் தேமுதிக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள தகவல் நேற்று முன் தினமே வெளியானது. காலை பத்து முப்பது மணி அளவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் கிரவுண் பிளாசா ஓட்டலுக்கு கேப்டனை அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக பிரேமலதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே தேமுதிக தலைமை அலுவலகத்தில் கூட்டணி உடன்பாடு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். 

ஆனால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்னொரு கட்சியின் அலுவலகத்தில் வந்து கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திடுவது சரியாக இருக்காது என்று அதிமுக தரப்பில் கைவிரிக்கப்பட்டது. அதே சமயம் விஜயகாந்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன் படி அதிமுக தரப்பின் வேண்டுகோளை ஏற்று கிரவுண் பிளாசா ஓட்டலின் பின்புறமாக விஜயகாந்த்தை அனுமதிக்க கிரவுண் பிளாசா நிர்வாகம் ஒப்புக் கொண்டது. 

அதுமட்டும் இல்லாமல் கேப்டன் வந்து செல்ல எளிதாக தற்காலிகமாக ஒரு சருக்கை பாதையும் அங்கு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கேப்டன் இரவு ஏழு மணி அளவில் கிரவுண் பிளாசா ஓட்டலுக்கு தனது மனைவி மற்றும் மைத்துனர் சுதீசுடன் வந்து சேர்ந்தார். பின்னர் ஏற்கனவே பேசியபடி தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த செய்தியாளர் சந்திப்பில் கண்டிப்பாக விஜயகாந்த் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக தரப்பு அன்பு கட்டளையிட்டிருந்தது. இதனை தொடர்ந்தே கேப்டனை கைத்தாங்கலாக அழைத்து வந்து செய்தியாளர் சந்திப்பில் அமர வைத்தார் பிரேமலதா. கேப்டன் நிலமையை புரிந்து கொண்ட செய்தியாளர்கள் அவரிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதே சமயம் கேப்டனும் வந்த உடனேயே தனது தொண்டையை சுட்டிக்காட்டி பேசமுடியாது என்று கூறிவிட்டார். 

இதனால் செய்தியாளர் சந்திப்பு முழுவதும் ஓ.பி.எஸ் மற்றும் பிரேமலதா மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். இதனிடையே கேப்டனை வீட்டில் இருந்து அழைத்து வந்த போதே எதுவும் பேச வேண்டாம் அமைதியாக இருந்தால் போதும் என்றே பிரேமலதா கூறி அழைத்து வந்ததாக சொல்கிறார்கள். அதன்படியே கேப்டன் அமைதியாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். கேப்டனால் தொடர்ச்சியாக பேச முடியவில்லை என்றாலும் எளிமையான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள் செய்தியாளர் சந்திப்பின் போது கேப்டன் பேசும் போது தடுமாறிவிட்டால் அது பிரச்சனையாகிவிடும் என்றே பிரேமலதா இப்படி ஒரு ஏற்பாட்டுடன் வந்ததாக தேமுதிகவினரே பேசிக் கொள்கிறார்கள்.