Again the BJP come to power the speech will also be lost
2019 தேர்தலில் மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் நமக்கு உள்ள பேச்சுரிமையும் பறிக்கப்பட்டுவிடும் என டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் எச்சரித்துள்ளார்.
தலித்துக்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி , தலித் தலைவரும் ,டாக்டர் அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் ,மகாராஷ்டிராவில் தலித் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புதெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்ட அம்மாநிலத்தையே உலுக்கியது.பின்னர் அவர் அந்த போராட்டத்தை வாபஸ் பெற்றதை அடுத்து இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில் , போபாலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-
மத அரசியலை கையிலெடுத்தால் அது கட்டுப்படுத்த இயலாத ஒன்றாக மாறிவிடும். மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி ஹபீஸ் சையத் போன்ற தீவிரவாதிகள் இந்துக்கள் மத்தியிலும் உருவாகும் நிலை ஏற்பட்டுவிடும்.

ஹிட்லர் ஆட்சி
ஹிட்லர் ஆட்சியைப் போல நாட்டில் மதத்தின் பெயரால் புதிய அமைப்பு ஏற்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அம்மாநில அரசு தவறியுள்ளது. மகாராஷ்டிராவில் தலித் மக்களை தாக்கியவர்கள் மீது அம்மாநில பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாங்கள் கோருகிறோம். ஆனால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களது வாக்குகளை பிற்படுத்தப்பட்டோர், தலித்துக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் பிரதிநிதிகளுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.அப்போதுதான் ஏழ்மை நிலையில் உள்ள இந்த பிற்பட்ட மக்கள் ஆட்சியதிகாரத்திற்கு வரமுடியும்.

பேச்சுரிமை பறிபோகும்
2019-ல் மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் நாம் இப்போது பெற்றிருக்கும் பேச்சுரிமை கூட பறிக்கப்பட்டுவிடும். எனவே அரசியலமைப்புச் சட்டத்தையும் பேச்சுரிமையையும் கட்டிக்காக்க நாம் போராட வேண்டியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பிற்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த அரசியல் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேச மாநில தலைவருமான அருன் யாதவை காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும்.
காங்கிரஸ் கட்சி அவ்வாறு அறிவிக்காவிட்டால் நாங்கள் எங்கள் வழியில் செல்வோம்.
இவ்வாறு தலித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.
