அகிலம் போற்றும் ஆட்சியை தந்திருக்காவிட்டாலும் கூட, மக்கள் நலன்களை காக்கும் பொருட்டு ஜெயலலிதா சில அதிரடி உத்தரவுகளை அறிவிக்க தவறியதில்லை.

அதில் மிக மிக முக்கியமான ஒன்றுதான் ‘லாட்டரி சீட்டு ஒழிப்பு!’. அரசாங்கத்துக்கும், கணிசமான தனியார்களுக்கும் வருவாயை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்த இந்த தொழிலை 2003-ல் தன் ஆட்சியின் போது சிங்கிள் உத்தரவில் முடித்துக் கட்டினார் ஜெ.,

ஜெயலலிதாவை செண்டிமெண்டாக சாய்த்து, மீண்டும் லாட்டரியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கு சில லாபிகள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் அசைந்து கொடுக்கவில்லை ஜெயலலிதா.

இப்போது அவர் அமரர் ஆகிவிட்ட நிலையில், அவர் பெயரை சொல்லி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாட்டரியை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சியில் அதே பழைய லாபி ஒன்று முதல்வரை குறி வைத்து இறங்கியிருக்கிறது என்கிறார்கள்.

இந்த முயற்சிக்கு ஆளுங்கட்சியின் சில மாஜி அமைச்சர்களும் உடந்தையாம். லாட்டரி மீண்டும் வந்தால், என்னதான் அரசாங்கம் அதை நடத்தினாலும் கூட ஏஜென்ஸி எடுக்கும் வாய்ப்பை தாங்கள் எடுத்து செமத்தியாய் சம்பாதிக்கலாமே என்கிற எண்ணம்தான் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

லாட்டரி பூதம் மீண்டும் கிளம்புகிறது எனும் தகவல் பரவிக்கிடப்பது போல், சாராய விற்பனை மீண்டும் தனியார் கைகளுக்கு போகும் என்பதும், அதிகப்படியான மது தேவையை சமாளிக்க புதிதாக மூன்று மது உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் கொடுக்கப்பட இருக்கிறது அரசு என்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் ஏற்கனவே வளர்ச்சி மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் தழைத்தோங்கியிருக்கும் தமிழ்நாடு இவையெல்லாம் மீண்டும் அறிமுகமானால் இன்னும் இன்னும் சீரும் பேரும் பெற்று சிறப்பாய் விளங்கிடும்! என்று பல்லைக் கடிக்கிறார்கள் அதே அரசியல் பார்வையாளர்கள்.

இவற்றுக்கெல்லாம் முதல்வர் அனுமதி தரக்கூடாது என்று வேண்டுவோமாக.