சசிக்கு எதிராக ஸ்பெஷல் எமர்ஜென்ஸி  நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி, சிறைக்குள் இருப்பவர் மீண்டும் ஒரு வழக்கில் கைதாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது! என்றும் அடித்துச் சொல்கிறார்கள்.
 
கொஞ்சம் விரிவாக பார்ப்போம்... ஜெ., சசி, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு மனுவின் தீர்ப்பின் மூலம் பெங்களூருவில் குன்ஹா வழங்கிய தண்டனை உறுதியானது. ஜெ., மரணித்துவிட்ட நிலையில் மற்ற மூவரும் சிறை சென்றனர். சிறையிலிருந்த சசிகலாவை தினம் தினம் அ.தி.மு.க.வினர் கூட்டம் கூட்டமாக பார்க்கப்போன போதே ‘ஒரு கைதியை தினந்தோறும் பலர் இப்படி சந்திப்பது எப்படி சாத்தியம்?’ என்று சிலர் சந்தேகத்தை கிளப்பினார்கள். 

இந்நிலையில் பரப்பன சிறையின் டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா திடீரென ஒரு பகீர் பட்டாசை பற்ற வைத்தார். அதாவது சிறையில் சசிகலா, இளவரசி இருவரும் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்! என்பதில் ஆரம்பித்து பல முறைகேடுகளை திரைகிழித்துக் காட்டினார். இந்த சலுகைகளுக்கு பிரதிபலனாக கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
 
நாட்டையே அதிரவைத்த இந்த விவகாரத்தில் அப்போதிருந்த சித்தராமையா அரசு ‘வினய் குமார் கமிஷன்’ எனும் ஒரு நபர் கமிஷனை அமைத்து விசாரணையை நடத்தியது. அந்த கமிஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தன் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. இதன் நகலை ரூபாவும், சமூக ஆர்வலரான பெங்களூரு நரசிம்மமூர்த்தியும் முறைப்படி பல முறை கேட்டனர். ஆனால் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் பெரும் போராட்டத்துக்கு பின் இப்போது நரசிம்மமூர்த்திக்கு அந்த அறிக்கையின் 295 பக்க நகல் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ‘சசிகலாவுக்கு எதிரான 295 பக்க குற்றப்பத்திரிக்கை’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். காரணம், அதில் உள்ள தகவல்கள் அத்தனையும் பரப்பன சிறையில் சசிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக வந்த புகார்கள் உண்மையே! என்று சொல்கின்றனவாம். 

* சசிகலா, இளவரசி இருவருக்கும் சேர்த்து மொத்தம் ஐந்து செல்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பொதுவாக ஒரு செல்லில் நான்கு பெண் கைதிகள் அடைக்கப்படுவார்கள். இவர்கள் இருவருக்கும் மட்டுமே ஐந்து செல்கள் ஒதுக்கப்பட்டாதால், இவர்களை தவிர்த்து மீதி 18 பேரையும் எங்கே எப்படி அடைத்தார்கள்?

* சசிகலாவுக்கென அவருக்கு ஒதுக்கப்பட்ட ஒரு செல்லிலேயே சமையல் நடந்திருக்கிறது. அஜந்தா எனும் பெண் கைதி, சமையல்காரியாக இருந்திருக்கிறார். ... என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளனவாம். இந்நிலையில், இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் சசிகலா உள்ளிட்டோரின் குற்றங்களை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்துள்ளன என்பதால் இதையே அடிப்படையாக வைத்து சசி, இளவரசி உள்ளிட்டோர் மீது ’லஞ்சம் கொடுத்து சிறை விதிகளை உடைத்துள்ளார்கள்.’ 

எனும் ரீதியில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்! மேலும் இவர்களிடம் ஆதாயம் பெற்றுக் கொண்டு விதிகளை தளர்த்தியவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்! என்று டி.ஐ.ஜி. ரூபா மற்றும் நரசிம்ம மூர்த்தி ஆகியோர் வலியுறுத்த துவங்கியுள்ளனர். இந்த ரூட்டைப் பிடித்துத்தான் ‘சிறைக்குள்ளேயே மீண்டும் கைதாகிறார் சசிகலா!’ என்று அ.ம.மு.க.வினுள் பதற்றத்தை பற்ற வைத்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால் சசியோ இதற்கெல்லாம் அஞ்சாதவராய், தனது வழக்கறிஞர்களை வைத்து ரூபாவை கார்னர் செய்யும் வழிகளி இறங்கிவிட்டதுதான் கெத்து!