அமமுக எவ்வளவு முயன்றும் நகராத நிலையில் சசிகலா வந்த பிறகு மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகும் திட்டத்துடன் டி.டி.வி. காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் பிப்ரவரி மாதத்துடன் சசிகலாவின் சிறை தண்டனை முடிவடைகிறது. பிப்ரவரி 14க்கு பிறகு அவர் பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளார். அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக மிகப்பெரிய அளவில் பேரம் நடைபெற்றதாகவும் சொன்னார்கள். ஆனால், பாஜக மேலிடம் காட்டிய கடுமையால் இந்த விவகாரத்தில் கர்நாடக சிறைத்துறை பின்வாங்கியுள்ளது. இதனால் பிப்ரவரி மாதம் தான் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு உள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் சசிகலா ஆக்டிவ் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் அவர் தினகரனுடன் இணைந்து செயல்படுவாரா அல்லது அதிமுகவிற்கு தூது விடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே தினகரன் வேண்டாம் சின்னம்மா என்றால் ஓகே என்று ஏற்கனவே சில அமைச்சர்களும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் கூறியுள்ளனர். அவர்கள் மூலமாக மீண்டும் அதிமுகவின் அதிகார மையமாக வேண்டும் என்பது தான் சசிகலாவின் முதல் டார்கெட்டாக இருக்கும் என்கிறார்கள். அது முடியாத பட்சத்தில் தான் அடுத்த திட்டத்தை சசிகலா செயல்படுத்துவார் என்கிறார்கள்.

இதே போல் தினகரனின் அமமுக மீது சசிகலாவிற்கு துளியளவு கூட நம்பிக்கை இல்லை என்பது வெளிப்படையாக தெரியக்கூடிய ஒரு விஷயம். எனவே அவர் அமமுகவை கண்டுகொள்ளமாட்டார்கள் என்று அடித்துச் சொல்கிறார்கள். இதனை தினகரனும் உணர்ந்து வைத்திருப்பதால் தான் தற்போது சசிகலா மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் என்கிற ஒரு விவாதம் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.

இதன் பின்னணியில் தினரகனுக்கு நெருக்கமானவர்கள் உள்ளதாக சொல்கிறார்கள். மீண்டும் சசிகலா அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்று அமைச்சர்களிடம் கேள்வி கேட்கும் செய்தியாளர்கள் பெரும்பாலும் தினகரனுக்கு நெருக்கமானவர்கள் என்று பேசிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இப்படி ஒரு விஷயத்தை கிளப்பிவிட்டதே தினகரன் தரப்பு தான் என்றும் கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் சின்னம்மா வந்து அதிமுகவில் இணைந்துவிட்டார் அவர் மூலமாக தான் எளிதாக உள்ளே சென்றுவிடலாம் என்கிற தினகரன் தரப்பின் நம்பிக்கை தான் என்று கூறப்படுகிறது.