ஒசூர் அருகே மாநில எல்லைப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 13 இஸ்லாமியர்கள் அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, குஜராத் மாநிலம் சூரத் பகுதியிலிருந்து வந்த கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 13 பேர் ஓசூர் அருகே மாநில எல்லையான ஜுஜுவாடியில் ஒரு தனியார் மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரின் உடல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு  கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி சமந்தபுரம் மற்றும் கட்டிகானப்பள்ளி பகுதியை சேர்ந்த 13 பேர் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள ஒரு ஜமாத் மசூதிக்கு சென்றுள்ளனர். 

மார்ச் 9 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இவர்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி  கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதன் காரணமாக இவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி வெளிமாநிலங்களில் சிக்கித் தவிப்போர் தங்கள் மாநிலங்களுக்கு செல்லலாம் அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த  இந்த 13 பேரும் அங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் ,  

அதில் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது  உறுதியான நிலையில் ஒரு தனியார் வாகனத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சூரத்தில் இருந்து வந்த இவர்கள் தமிழக எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் பாதுகாப்பு கருதி அங்குள்ள தனியார் மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் 13 பேருக்கும் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.