கலைஞருக்காக கடந்த செப்டம்பர் 5 அன்று அழகிரி நடத்திய பேரணியின் போது, திமுகவில் இருக்கும் யார்? யார்? எல்லாம் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பதை, தீவிரமாக கண்கானித்திருக்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே அழகிரி கூறியது போல அவர் பக்கம் இருக்கும் அந்த திமுக விசுவாசிகள் யார்? யார்? என்பதை அறிந்தால் தானே இப்போதே களையெடுக்க முடியும் என உன்னிப்பாக கவனித்ததில். 

முதலில் சிக்கியது வேளச்சேரி ரவி தான். பேரணி நடத்துவதற்காக மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அழகிரியை , நேரில் சென்று வரவேற்றதற்காக இவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறது திமுக மேலிடம். அதே சமயம் விழுப்புரத்தில் இருந்து 2500 தொண்டர்களை 250 வாகனங்களில் திரட்டி வந்த, திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சம்பத் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 

அழகிரிக்காக அணி திரட்டி வந்த இவர் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். இவரது அம்மா , அப்பா என குடும்பமே திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்திருக்கின்றனர்.  இவரது அப்பா ஏ.கோவிந்தசாமி அண்ணாவின் அமைச்சரவையில் இருந்திருக்கிறார். அம்மா பத்மாவதி எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். மொத்தத்தில் இவர் குடும்பமே அரசியல் பாரம்பரியம் மிக்கது தான்.


அப்படி இருந்தும் கூட இவருக்கு திமுகவில் சரியான சூழல் நிலவவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவை பொறுத்தவரை பொன்முடியின் கை தான் ஓங்கி இருக்கிறது. இதனால் சம்பத்துக்கு கட்சியில் அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை. பொன்முடிக்கு எதிராக இருக்கும் யாருக்குமே, விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் மரியாதை கிடைக்காது. 

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பொறுப்பாளராக இருந்த இவர், தனக்கான முக்கியத்துவட்தை தக்கவைத்து கொள்ளும் முயற்சியில், பொன்முடியை சமாளிக்க முடியாமல் கட்சியை விட்டே வெளியேறிவிட்டார். அதன் பிறகு மீண்டும் கட்சியில் சம்பத் இணைந்தாலும் அங்கு அவருக்கு சாதகமான சூழல்  நிலவவில்லை. இதனால் தான் தற்போது அழகிரிக்கு ஆதரவாக நிற்கிறார் சம்பத்.