மேற்குவங்கத்தில் மம்தா பாணர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியில் சமீபத்தில் சேர்ந்த அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ வுமான அர்ஜுன் சிங் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தார். மக்களவை தேர்தல் அங்கு ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. 

தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சிங்க், "திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் 100 எம்.எல்.ஏ க்கள் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர். அவர்கள் அதற்காக பாஜக தலைவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். சிலர் தேர்தலுக்கு முன்பே கூட இணைய வாய்ப்பிருக்கிறது. மற்றவர்கள் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இணைய முடிவு செய்துள்ளனர். இதனால் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தாமலேய பாஜக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது" என கூறியுள்ளார். இதனால், மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

2016ல் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 211 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.