முதலமைச்சரை நீக்கிய பிறகு பன்னீர் செல்வம் எங்களுடன் ஒத்து வந்தால் இணைத்து கொள்வோம் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் எனவும் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22–ந் தேதி கிண்டி ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தனித்தனியாக மனு கொடுத்தனர்.  ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர்  மும்பைக்கு சென்றுவிட்டார்.
மனு கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னைக்கு வருகிறார்.
இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், முதலமைச்சரை நீக்கிய பிறகு பன்னீர் செல்வம் எங்களுடன் ஒத்து வந்தால் இணைத்து கொள்வோம் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார். 

தனபால் முதலமைச்சராக வந்தால் ஆதரிப்போம் எனவும், சபாநாயகரின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது எனவும், தெரிவித்தார். 

முதலமைச்சரை மாற்றினால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் எனவும், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் குடியரசு தலைவரிடம் செல்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.