after six moths dmk will come to rule told stalin
அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் வரும் என்றும், அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் திமுக, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாத சக்தியாக திகழும் என்றும் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா பொதுக்கூட்டம் சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார்.
அப்போது தி.மு.க. ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு, சமூக நீதியின் அடிப்படையில் உரிமைகளை கருணாநிதி பெற்று கொடுத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக கருணாநிதி உயர்த்தினார்.

உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, வன்னியர் உள்ளிட்ட சமுதாயத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது என சமூக நீதியை காத்தவர் கருணாநிதி என ஸ்டாலின் கூறினார்..
தமிழகத்தில் மக்கள் எதிர்பார்த்த தேர்தல் விரைவில் வரப் போகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர போகிறது. இந்த தீர்ப்பு வந்த பிறகு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவு வரும். அப்போது மெஜாரிட்டியை நிரூபிக்கவில்லை என்றால், ஆட்சி கவிழும். இதையடுத்து 6 மாதத்தில் தி.மு.க. ஆட்சி வரும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்..
6 மாதத்தில் வரும் தேர்தலில் மக்களை சந்தித்து, வெற்றி பெற்று ஆட்சியில் அமருவோம் என தெரிவித்த ஸ்டாலின், இதையடுத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஒரு அசைக்கமுடியா சக்தியாக திகழும் என கூறினார்.
