டெல்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார் . டெல்லியில்  நடந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் .  டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது அதில் அக்கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி தலைமை  தாங்கினார் .  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , 

டெல்லியில் நடந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று ,  பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்ததன் நீட்சியாகவே இந்த கலவரம் நடந்துள்ளது. பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து  வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர் . டெல்லியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .

நடைபெற்ற வன்முறை தொடர்பாக முன்கூட்டியே உளவுத்துறைக்கு  தகவல் கிடைக்கவில்லையா.?  துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை..?  இந்த வன்முறைக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் .  நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை  அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என   சோனியா காந்தி வலியுறுத்தினார். 

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது இந்ந மோதலில் போலீசார்  துப்பாக்கிச்சூடு நடத்தினர், இதில்  கடைகள் , கார்கள், பொது சொத்துக்கள் என வன்முறையாளர்கள் கண்ணில் பட்டவைகளையெல்லாம் அடித்து உடைந்து வன்முறையில் ஈடுபட்டனர்  இந்த கலவரத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.