கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளையடிக்க முடியாமல் திமுகவினரின் கைகள் நமநமத்து போய் உள்ளது என்று துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். 

மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “தீய சக்திகளின் சவால்களை எல்லாம் முறியயடித்து ஜெயலலிதாவின் நினைவாலயம் சென்னையில் திறக்கப்பட்டது. இன்று மதுரையில் எம்ஜிஆர்-ஜெயலலிதாவுக்கு திருக்கோயில் திறக்கப்பட்டுள்ளது. கேட்டதை கொடுக்கும் தெய்வங்கள் பல உள்ளன. ஆனால், கேட்காமலேயே கொடுத்த தெய்வங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாதான். 
அவர்களுக்காக அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கோயிலே கட்டியுள்ளார் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. தெய்வ சக்தியையும் மக்கள் சக்தியையும் நம்புகிற இயக்கம் அதிமுகதான். ஆனால், சிலபேர் தெய்வங்களை இழிவுப்படுத்துவார்கள். தேர்தல் வந்தால் நடிப்பார்கள். மக்களும் அந்தத் தெய்வங்களும் அவர்களை பார்த்தக்கொண்டுதான் இருக்கின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்காக வடக்கே இருந்து ஆட்களைப் பிடித்து வந்தார்கள், இப்போது வேல் பிடிக்கிறார்கள். அவர்கள் ஆள் பிடித்தாலும், வேல் பிடித்தாலும் தமிழகத்தில் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


அதிமுக ஆட்சிக்கு எத்தனை இடையூறு வந்தாலும் அதை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் தடுத்து நிறுத்துவான். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக நிகழ்த்திய சாதனை திட்டங்கள் எல்லாம் தமிழக இல்லங்களைச் சென்றடைந்துள்ளது. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாகவும் மக்கள் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள். இதைச் சீர்குலைக்க மு.க. ஸ்டாலின் தினமும் புதுபுது அவதாரங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், எந்த அவதாரம் எடுத்தாலும் மக்கள் மனதை அவரால் ஈர்க்க முடியாது.