admk youth wing opposite to ramadoss and evks
சட்டசபையில் அம்மாவின் போட்டோவை திறக்க கூடாது என சொல்லும் ராமதாஸும், இளங்கோவனும் நன்நூல்களா?’ - என வாட்ஸ் அப்பில் வறுத்தெடுக்க துவங்கியிருக்கிறது அ.தி.மு.க.வின் இளைஞரணி.
தமிழக சட்டசபையில் ஜூலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மோடி கையால் திறக்கும் விழாவுக்கு தெம்பாக தயாராகி வருகிறது எடப்பாடி தலைமையிலான அணி. சமீபத்தில் டெல்லியில் பிரதமரை சந்தித்த போது இதற்கான பர்மிஷன் பிட்டையும் போட்டுவிட்டுதான் வந்திருக்கிறார் எடப்பாடி.
இந்நிலையில் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்ய துவங்கியுள்ளனர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள். குறிப்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‘’ஒரு குற்றவாளிக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டுவது மிகவும் தவறு. இது தவறான செயல் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்ட சபையில் திறக்கலாமா? அவ்வாறு செய்யக்கூடாது. அதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஐ.ஜி. அலுவலகங்களில் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்றவர்களின் படங்களை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

அதுவும் பொதுவான இடத்தில். இது தொடர்பாக யாராவது நீதிமன்றம் சென்றால் மணிமண்டபம் கட்டக்கூடாது என்று உத்தரவு வரும் நிலை ஏற்படும்.” என்று ச்சும்மா கிடக்கும் யாரையோ கோர்ட்டுக்கு போக உசுப்பேற்றியுள்ளார்.
பா.ம.க.தலைவர் ராமதாஸும் தன் பங்குக்கு “ஜெயலலிதா நேர்மையான முதல்வராக இருந்திந்தால் அவரது படத்தை சட்டசபையில் திறப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பு உணர்வும் இருந்திருக்காது. ஆனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அவரது படத்தை திறப்பது தவறானது.” என்று சாடியுள்ளார்.
ஆக ஒரு போட்டோவுக்கு இத்தனை அக்கப்போராடா? என்று கொதித்தெழுந்திருக்கும் அ.தி.மு.க. இளைஞரணியினர் “அம்மாவை விமர்சிக்கும் இளங்கோவனும், ராமதாஸும் நன்னூல்களா? மரத்தை வெட்டி கட்சியை ஆரம்பித்தவர் ராமதாஸ். இளங்கோவனோ வாய்த்திமிராக பேசுவதால் சொந்த கட்சியிலேயே சூனியமாக்கப்பட்டவர்.

நாங்கள் கேட்கிறோம், இவர்கள் இருவரது மகன்களும் நல்ல பெயரை சம்பாதித்த நபர்களா? ராமதாஸின் மகனான அன்புமணி மத்தியமைச்சராக இருக்கும்போது மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக ஒரு விவகாரத்தில் சிக்கி பெயரை கெடுத்துக் கொண்டவர். இன்னமும் இந்த வழக்கு ஓடிக்கொண்டுதானே இருக்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு நிதியை கையாண்டது தொடர்பான விவகார குற்றச்சாட்டு ஒன்றும் அன்புமணி மீது இருப்பதை இந்த நேரத்தில் வெளிச்சமிட்டுக் காட்ட விரும்புகிறோம்.
இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. மீது ஈரோட்டில் ஆட்கடத்தல், கொலை மிரட்டல் வழக்கே சில வருடங்களுக்கு முன் பதிவானதையும் மக்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம். அன்புமணியும், இளங்கோவனும் வெறும் மத்தியமைச்சர் பொறுப்பில் இருந்தபோதே இத்தனை ஆட்டம் ஆடிய இந்த நபர்களின் கைகளில் முதல்வர் எனும் அதிகாரம் போயிருந்தால் தமிழ்நாட்டை விற்று வாயில் போட்டிருப்பார்கள்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா உருவ படத்தை திறக்க கூடாது என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். அவரது கட்சிக்கு 1998-ல் அங்கீகாரம் கொடுத்தது எங்கள் கட்சித் தலைவி ஜெயலலிதாதான் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவியான எங்கள் அம்மா படத்தை, எங்கள் உயிரைக் கொடுத்தாவது திறப்போம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
அதனால் எங்கள் அம்மாவை பற்றி எந்த விமர்சனத்தையும் முன் வைக்க எள்ளளவும் தகுதியற்ற இந்த நபர்கள் இனியும் இந்த விஷயத்தில் விவகாரமாக பேசி வந்தால் அவர்களின் பழைய வரலாறை தோண்டியெடுத்து பொதுவெளியில் துவம்சம் பண்ணிவிடுவோம்.” என்று தாளித்துள்ளனர்.
போட்டோவ பத்தி இனி பேசுவீங்களா தல?!
