வெளிநாடுகளில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் பழனிச்சாமி இன்று முதல் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டார்.

முதல்வரை வழியனுப்புவதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், அதிமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அமைச்சர்கள் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினர். அப்போது அங்கு வந்திருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் முதல்வரின் காலில் விழுந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த போது அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அவரின் காலில் விழுந்து வணங்கும் பழக்கத்தை வாடிக்கையாக வைத்திருந்தனர். அமைச்சர்கள் முதற்கொண்டு சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். அவர் மறைந்த பிறகு பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா காலிலும் அதிமுகவினர் விழுந்து வணங்கினர்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கைகளுக்கு கட்சி சென்ற பிறகு தான் காலில் விழும் பழக்கம் ஓய்ந்திருந்தது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி காலில் அதிமுகவினர் விழுந்துள்ளதால், அதிமுகவில் கடைபிடிக்க படும் காலில் விழும் கலாச்சாரம் மீண்டும் தொடங்கியுள்ளதா என அரசியல் வல்லுநர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.