ஒரு சீர்திருத்தம் என்றால் எப்படி இருக்க வேண்டும்..? 1980 இல், ஊராட்சி நிர்வாகத்தில் எம்.ஜி.ஆர். செய்த மாற்றம் இதற்குச் சரியான உதாரணம். 1980க்கு முன்பு வரை, ஒவ்வொரு கிராமத்திலும், 'மணியம்' 'கர்ணம்' என்று இரு பதவிகள் இருந்தன. அநேகமாக இவை, பரம்பரை சார்ந்தே வந்தன. அதாவது ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசமே, கிராம நிர்வாகம் பரம்பரையாக இருந்து வந்தது.

ஒரு உண்மையும் பதிவிட வேண்டும். இவ்வகை மணியம், கர்ணம் பணி புரிந்தவர்கள், அநேகமாக எல்லாருக்கும் பொதுவாகவே நடந்து கொண்டார்கள். ஆனாலும் எல்லாருக்குமான அரசுப் பணியில் எல்லாரும் வருவதற்கான சூழல் இருப்பதுதானே நியாயமானது..? ஆனால் அப்படி இல்லை. இந்தியா விடுதலை அடைந்து 33 ஆண்டுகள் வரை இதே நிலை நீடித்தது. Abolition of the posts of part-time Village Officers Act அதாவது, பகுதி நேர கிராம அலுவலர்கள் நீக்கச் சட்டம், எம்.ஜி.ஆர். அரசால் கொண்டு வரப் பட்டது. 1981 மார்ச் 2 அன்று ஆளுநரின் ஒப்புதல் பெற்ற இச்சட்டத்தின் மூலம், அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக இளைஞர்கள், கிராம நிர்வாகத்தில் பங்கு பெறவும், முழு நேர அரசு அலுவலராக, தேவையான அதிகாரத்துடன் பணி புரியவும் வாய்ப்பு கிடைத்தது.   

சட்டம் இவ்வாறு கூறியது:  
Whereas, the State Government are of the opinion that the system of part-time Village Officers is out-moded and does not fit in with the modern needs of village administration; And Whereas, the State Government have, after careful consideration, taken a policy decision to abolish all the posts of part-time Village Officers on grounds of administrative necessity and to introduce a system of whole-time officers to be in charge of village administration.

 

பகுதி நேர கிராம அலுவலர் என்பது, காலத்துக்கு ஒவ்வாத 'outdated' முறை; கிராமப்புற நிர்வாகத்தின் நவீனத் தேவைகளுக்கு பொருந்தி வராது. இந்த உண்மையும் இதனைச் சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் எம்.ஜி.ஆருக்குத்தான் தோன்றியது. உடனடியாக சட்டம் பிறப்பித்து, பழைய முறையை மாற்றி புதிய நிர்வாக முறையைக் கொண்டு வந்து விட்டார். 'நிர்வாகத் திறமை மிக்கவர்' என்று விளம்பரப் படுத்தப் படும் ஒருவர் செய்யாததை, 'இவருக்கு நிர்வாகம் தெரியாது' என்று யாரைக் குறித்துக் கதை விடுகிறார்களோ அவர் செய்து காட்டினார். 

புதிய சட்டம் 1980 நவம்பர் 14 அன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தாய்க் கருதப் பட்டது. (It shall be deemed to have come into force on the 14th November 1980) இச்சட்டதின் பிரிவு 4 இவ்வாறு கூறுகிறது: 
4. Appointment of Village Administrative Officers. - (2) No person shall be eligible for appointment to the post of Village Administrative Officer unless he possesses the minimum general educational qualification referred to in Tamil Nadu State and Subordinate Service Rules. (3) The Village Administrative Officer shall be a whole-time Government servant.(4) The posts of Village Administrative Officers shall form a separate category in the Tamil Nadu Ministerial Service.

முதல் முறையாக, கிராம நிர்வாக அலுவலருக்கு, குறைந்த பட்ச கல்வித் தகுதி, சட்டபூர்வமாக நிர்ணயிக்கப் பட்டது. 1980க்கு முன்பு வரை கிராம நிர்வாகத்தை கவனித்துக் கொள்பவர், பரம்பரை வழி வந்தவரே தவிர, படிப்பின் அடிப்படையில் அல்ல.  கிராம நிர்வாக அலுவலர், முழு நேர அரசுப் பணியாளர் ஆவார். இவர் தமிழ் நாடு அமைச்சகப் பணியின் கீழ் வருவார்.

The Village Administrative Officer shall perform the duties relating to the collection of land revenue, taxes and other sums due to the Government, maintenance of village records and such other duties (including the implementation at the village level of the schemes of the Government) as may be assigned to him by the appropriate authority, from time to time.

நில வருவாய், வரிகள் மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய தொகைகள், கிராமம் தொடர்பான ஆவணங்களின் பராமரிப்பு, அரசு கொண்டு வரும் திட்டங்களை கிராமங்களில் அமல்படுத்துதல் என்று முக்கிய பணிகளை கிராம நிர்வாக அலுவலர் கவனித்துக் கொள்கிறார். கிராம நிர்வாக அலுவலருக்கு மாத ஊதியம் சுமார் 22,000 கிடைக்கிறது. பிற அரசு ஊழியர்களைப் போன்றே அடைப்படைச் சம்பளம், வெவ்வேறு படிகள் (allowances) கொண்ட ரூ. 19,500 - 62,000 என்கிற ஊதிய நிலையில் வி.ஏ.ஓ. பணி அமைகிறது. 

குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்; மற்ற அரசுப் பணிகளைப் போலவே, வி.ஏ.ஓ. தேர்விலும், சட்டபூர்வ இடஒதுக்கீடு கட்டாயம்.  தமிழ்நாட்டில் தற்போது 12614 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர்.யோசித்துப் பாருங்களேன்..எல்லாப் பிரிவினருக்கும் அதிகாரம் பரவல் ஆனது; புதிதாக 12,000க்கும் மேலான, கிராமப்புற வேலைவாய்ப்பு உருவானது; கிராம நிர்வாகத்துக்கு முழு நேர அலுவலர்கள் கிடைத்தனர்; படித்த இளைஞர்களின் கைகளுக்கு கிராம நிர்வாகம் மாறியது. ஏதேனும் சான்றிதழ் கேட்டு 'ஒருவர் வீட்டுக்கு' போய் நின்ற காலம் ஒரே அரசாணையால் மாறியது. இப்போதெல்லாம் 'வி.ஏ.ஓ.' அலுவலகத்துக்குப் போகிறோம் நாம். அரசு அலுவலர் என்பதால் அவரை நாம் உரிமையாய்க் கேள்வி கேட்கிறோம். அவரும் நவீன தேவைகளுக்கு ஏற்ப, நிர்வாகத்தில் நவீன மாற்றங்களைக் கொண்டு வருகிறார். இதற்கேற்ப, வி,ஏ.ஓ.க்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது திறன் மேம்பாட்டுப் பயிற்சி தந்து வருகிறது. 

எத்தனை ஆரோக்கியமான மாற்றம் பாருங்கள்... எல்லாருக்கும் நீண்ட காலப் பலன் தருகிற இது போன்ற சட்டங்கள், திட்டங்கள் கொண்டு வந்ததால்தான் இன்றும் எம்.ஜி.ஆர்., மக்கள் திலகமாக தொடர்ந்து வாழ்கிறார். என்னதான் ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலும், எதிர்கால இளைஞர்களுக்காக, மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் ஒரு வேலை செய்தார் பாருங்கள்... அடடா.. எம்.ஜி.ஆர். உண்மையில் புதிய சரித்திரம் படைத்தார். அப்படி என்னதான் செய்தார் எம்.ஜி.ஆர்.?

-கட்டுரையாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

(வளரும்.