வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுகவின் வெற்றிக் கோட்டை அல்ல; வெற்றுக்கோட்டை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
சென்னையை அடுத்த வாணியஞ்சாவடி மீன்வள உயிர் தொழில்நுட்ப நிலையத்தில், முதுகலை பட்டப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டு ஆணையை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அஞ்சலகப் பணியிடங்களை நிரப்பும் எழுத்துத் தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “இதுகுறித்து சட்டப்பேரவையில் நாளை உரிய விளக்கம் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.


பின்னர் அதிமுகவின் தலைவராக நடிகர் ரஜினியை முன்னிறுத்த பாஜக முயல்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  “இதுபோன்ற கற்பனையான கதைகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று காட்டமாகத் தெரிவித்தார். பின்னர் வேலூர் கோட்டை திமுகவின் வெற்றிக் கோட்டை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “வேலூர் திமுகவின் வெற்றிக் கோட்டை அல்ல, வெற்றுக் கோட்டை.வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்” என்று உறுதிபடத் தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.