திருப்பரங்குன்றம் தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவில் எத்தனை பிளவுகள் வருகின்றன எனப் பாருங்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதிகள் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக ஆட்சி சிக்கலின்றி தொடருமா தொடராதா என்பதை இடைத்தேர்தல் முடிவு செய்யும் என்பதால், இந்தத் தேர்தல் முடிவுகளை தமிழக அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளன. திமுகவின் தேர்தல் பிரசாரம் அதை மையப்படுத்தியே இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் துரைமுருகனின் பிரசாரத்தில் அது எதிரொலித்தது.  
“மே 23 அன்று தேர்தல் முடிவு வெளிவர உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 36 தொகுதிகளிலும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எத்தனை பிளவுகள் வருகின்றன எனப் பாருங்கள்.

 
தேர்தலில் வாக்காளர்களுக்கு நாங்கள் பணம் கொடுப்பதாக அதிமுகவினர் கூறுகிறார்கள். எங்களிடம் பணமே இல்லை. அதிமுகவினர்தான் போலீஸ் வாகனங்களில் பணத்தைக் கொண்டு செல்கிறார்கள். என்னை பொறுத்தவரை அதிமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும்” என்று துரைமுருகன் பேசினார்.