காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.  

காஞ்சிபுரத்தில் திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தையும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்தும் திருக்கழுக்குன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.


இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, “அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்ற கூட்டணி இது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தற்போது, கூட்டணி அமைத்து அதிக பலத்துடன் தேர்தலைச் சந்திக்கிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலினின் செயல்பாடு பற்றி நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஸ்டாலின் ஆளுமைத் திறனற்றவர். திமுக தற்போது கட்சியாக இல்லை; கார்ப்பரேட் நிறுவனமாக உள்ளது. வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள்தான் தற்போது அக்கட்சியின் ஆலோசகர்களாக உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் அதிமுகவை தவிர வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். அதனால், தேர்தலில் சிறப்பாக வாக்களித்து அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” எனக் கூறினார் ராமதாஸ்.
இதைக் கேட்டதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். சில விநாடிகளில் சுதாரித்துகொண்ட ராமதாஸ், திமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்'' என மாற்றி கூறினார்.