அதிமுகவின் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
மறைந்த நிதியமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவியும் , முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவருமான அதிமுக அமைப்புசெயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் இன்று உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் காலமானார்.
சேலத்தை சேர்ந்த விசாலாட்சி நெடுஞ்செழியன் , 1946 ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1982 ஆண்டு வரை அரசு மருத்துவராக பணியாற்றி உதவி இயக்குனராக ஓய்வு பெற்றார்.

திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியனை மணந்த விசாலாட்சி நெடுஞ்செழியன் 1989 க்கு பிறகு அரசியலுக்கு வந்தார். நெடுஞ்செழியன் திமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார், நிதியமைச்சராக அனைத்து ஆட்சியிலும் இருந்தார்.
அவரது மறைவுக்கு பிறகு விசாலாட்சி நெடுஞ்செழியன் அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தார். மகளிர் ஆணைய தலைவியாக பதவி வகித்த விசாலாட்சி நெடுஞ்செழியன் கடந்த 15 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 92 . இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிசடங்கு நடைபெறுகிறது.
