உள்ளாட்சித் தேர்தலிலேயே சட்டமன்றத்தேர்தலுக்கு நங்கூரமிடத் திட்டமிடுள்ள அதிமுக தலைமை இப்போதே திமுக வலுவாக இருக்கும் தொகுதிகளையும் வலைத்துப்போட ஸ்கெட்ச் போட்டு வருகிறது. எங்கெங்கெல்லாம் திமுகவின் முக்கியத்தலைகள் போட்டியிருகிறார்களோ அவர்களை வீழ்த்தி திமுகவை திணறடிக்க திட்டமிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் திருப்பத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றிபெற்று அமைச்சராகவும் கோலோச்சி வந்த திமுக பெரியகருப்பனை வீழ்த்த வலுவான தொகுதி பின்புலம் உள்ள ஒரு நபரை அதிமுக சார்பாக நிறுத்த திட்டமிட்டனர். அதற்கு சரியான நபராக நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜை நிறுத்த எடப்பாடியும், ஓ.பி.எஸும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மருது அழகுராஜுக்கும் இது சொந்தத் தொகுதி. அவர் சார்ந்த சமுதாய வாக்குகளும் அவருக்கு பலம். பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். அத்தோடு மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் ஆதரவும் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இவரை திருப்பத்தூர் அதிமுக வேட்பாளராக களமிறக்க இன்னொரு காரணமும் இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றனர். கடந்த  பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு உரை எழுதிக் கொடுத்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பேசிய முதல் உரையையும் எழுதிக் கொடுத்ததும் இவரே. 

அத்தோடு நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் எதிர்கட்சிகளை விலாசுவதில் அதிமுகவினரே லயித்துப்போவார்கள். இப்போதும் சித்ரகுப்தன் என்கிற பெயரில் நமது அம்மாவில் எதிராளிகளை சித்ரவதைக்கு உள்ளாக்கி வருகிறார்.  இவரது திறமையறிந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு மருது அழகுராஜை மாநிலங்களவை எம்.பியாக்கி அழகு பார்க்க நினைத்தார்.

 

ஆனால் சசிகலா தலையிட்டு வைத்திலிங்கம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், மருது அழகுராஜ் என நால்வரில் மூவர் முக்குலத்தோர் சமூதாயத்தை சார்ந்தவர்கள் என்கிற காரணத்தைக் கூறி மருது அழகுராஜுக்கு வரவேண்டிய பதவியை கிடைக்காமல் செய்து விட்டார். அவருக்கு பதில் விஜயகுமார் பெயர் அந்தப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. 

இந்த விஷயங்களும் ஓ.பி.எஸ்- எடப்பாடியாருக்கு தெரியும் என்பதால் இந்த முறை மருது அழகுராஜுவை திருப்பத்தூர் தொகுதியில் களமிறக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.