தமிழகத்தில் இனி தேனாறும், பாலாறும் ஓடும் என்றும், காவிரி கரைபுரளும், இறந்த உழவர்கள் உயிர்பிழைப்பார்கள் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

பல்வேறு இழுபறிக்குப் பிறகு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணி இன்று ஒன்று சேர்ந்தது. சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் அணிகள் இணைப்பு குறித்து அறிவிக்கப்பட்டது. இ.பி.எஸ்., ஓ.,பி.எஸ்., அணிகள் இணைப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அணிகள் இணைக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே அணிகள் இணைப்பு நடைபெற்றதாக திவாகரன் கூறியிருந்தார். ஒட்டுமொத்த துரோகத்தின் உச்சகட்டம் என்றும் தினகரன் கருத்து
தெரிவித்திருந்தார்.

அணிகள் இணைப்பு குறித்து, நடிகர் கமல் ஹாசன், தமிழனுக்கு கோமாளி குல்லா என்றும், தமிழர்கள் வெகுண்டெழ வேண்டும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இணைப்பு குறித்து எஸ்.வி.சேகர், தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆவதை இனி வேறு யாரும் தடுக்க முடியாது என்றும், சிங்கத்திற்கு சுண்டெலி பிராண்டு அம்பாஸ்டர் என்றும் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதேபோல், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அணிகள் இணைப்பு மூலம் இனி தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும், காவிரி கரைபுரளும், இறந்த உழவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்றும் வாழ்க ஜனநாயகம் என்றும் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.