admk symbol issue munusamy alleged sasikala
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவது தொடர்பாக சசிகலா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என பன்னீர்செல்வம் ஆதரவாளரும் பழனிசாமி அணியில் உள்ளவருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் பழனிசாமி அணியுடன் பன்னீர்செல்வம் அணி இணைந்தபிறகு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து இரு அணியினரும் கூடுதல் ஆவணங்களையும் பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து இரு அணிகளின் சார்பிலும் கூடுதல் ஆவணங்களும் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று, தேர்தல் ஆணையம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்நிலையில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என குற்றம் சாட்டினார். மேலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
