நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த, அதிமுக, தற்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
முஸ்லீம் பெண்களை, ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடுக்கும் வகையில், முத்தலாக் தடை சட்ட மசோதாதாவை முந்தைய அரசில் மோடி அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக 37 எம்.பி.களைக் கொண்டிருந்த அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவின் மீது பேசிய அப்போதைய அதிமுக எம்.பி. அன்வர் ராஜா மோடி அரசை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.


இடையே நாடாளுமன்றத்தேர்தல் வந்ததால், அந்த மசோதா நிலுவையில் இருந்துவந்தது. முந்தைய அரசில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, அதன் பதவிக்காலம் முடிந்ததும் காலாதியானது. இந்நிலையில் இந்த மசோதா மக்களவையில் மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
மக்களவையில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி இருப்பதால், அந்த மசோதா 303 வாக்குகளுடன் நிறைவேறியது. எதிர்த்து 82 வாக்குகள் பதிவாயின. இந்த மசோதாவுக்கு அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓ. ரவீந்திரநாத் குமார் அளித்தார். கடந்த டிசம்பரில் இந்த மசோதா கொண்டு அறிமுகமானபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இந்த முறை ஆதரவு தெரிவித்தது.