மத்திய அரசுக்கு ஒன்றிய அரசு என்று புதுப்பெயர் சூட்டுவது, ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்வது, திடீரென மத்திய அரசு எங்களின் உற்ற நண்பர் என்று அந்தர்பல்டி அடிப்பது, இப்படியான கோமாளி கூத்துகளுக்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சியா.?

திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிவரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் அதுதொடர்பாக காரசாரமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் திராவிட மாடல் வளர்ச்சியைப் பெறும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். இதேபோல திராவிட மாடல் வளர்ச்சி என்பதை ஸ்டாலின் அடிக்கடி பேசி வருகிறார். இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘நமது அம்மா’ பத்திரிகையில் குத்தீட்டி என்ற பெயரில் திராவிட மாடல் ஆட்சி குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறதாமே? அப்படியா? எது திராவிட மாடல் ஆட்சி? வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசுகளை கொடுத்து அரசியல் வெள்ளாமை பார்ப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ஓட்டுக்கு காசு, இயந்திரத்தில் தந்திரம், தொண்டர்கள் போர்வையில் குண்டர்கள், தேர்தல் ஆணையமும் காவல் துறையும் ஆளும் கட்சிக்கு கரை வேட்டி கட்டாத சேவகர்களாக ஊழியம் பார்ப்பது, அதன் மூலம் அருவருத்தக்க வெற்றியை அபகரித்துக்கொள்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

திமிர்வாதம் பேசுவதா?

கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் என்றும் உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதற்காக தமிழ் நாட்டு எம்.பி.க்கள் குழு என்றும் உதார் விடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, நிமிடத்தில் தருவோம் நீட்டுக்கு விலக்கு, ஏழே நாளில் ஏழு பேருக்கு விடுதலை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், சிலிண்டருக்கு மானியம், நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவது, பெட்ரோல், டீசல் விலையை ஆட்சியில் அமர்ந்த வேகத்தில் குறைப்பது, அடகு வைத்த நகைகளை திருப்பி தருவது, கல்விக்கடன், விவசாயி கடன், கூட்டுறவு வங்கிக் கடன் என்று அத்தனை கடன்களையும் ரத்து செய்வோம் என்பது, இப்படியாக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி வறிய மக்களின் வாக்குகளை வலைவீசி பிடித்துவிட்டு, ஆட்சியில் அமர்ந்தவுடன் நாங்கள் வாக்குறுதிகளுக்கு தேதி போட்டோ கொடுத்தோம் என்று திமிர்வாதம் பேசுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

மத்திய அரசுக்கு ஒன்றிய அரசு என்று புதுப்பெயர் சூட்டுவது, ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்வது, திடீரென மத்திய அரசு எங்களின் உற்ற நண்பர் என்று அந்தர்பல்டி அடிப்பது, இப்படியான கோமாளி கூத்துகளுக்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சியா.? கள்ள ஓட்டுப் போட வந்த கிரிமினல் குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தால், ஒப்படைத்தவர் மீதே அடுக்கடுக்காய் வழக்கு போட்டு உள்ளே வைப்பதும், பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளோடு நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கிரிமினல் பேர்வழியை வழியனுப்பி வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

புணுகு பூச்சு

கூட்டணி கட்சிக்கு இடங்களை ஒதுக்கி விட்டு அந்த இடங்களுக்கு தன் கட்சி ஆட்களை ஏவி போட்டியிட வைத்துவிட்டு புணுகு பூசுவதும், புல்லரிக்கப் பேசுவதும் திராவிட மாடல் ஆட்சியா? இப்படி அடுக்கி சொல்ல முடியா அருவருப்புகளோடு நடப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றால், அந்த திராவிட மாடல் ஆட்சிக்கு வாக்களித்த மக்களோடு ஒட்டுமொத்த தமிழினமும் தலைகுனிந்து நிற்பதன்றி வேறென்ன செய்வதோ? வெட்கம், வெட்கம்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.