ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்தது.

அதன்படி ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, முதல்முறையாக எதிர்க்கட்சிக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டத்தை இன்று தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது.

அதன் ஒருபகுதியாக தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தேனி மதுரை பிரதான சாலை முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவி என்கிற ரவீந்திரநாத்குமார் மேடைக்கு வந்தார். அவர் வந்ததும் மழை ஆரம்பித்தது. அதுவரை குழுமியிருந்த மக்கள் மழை காரணமாக கலைந்துசென்றனர்.

லேசான தூரல் ஆரம்பித்ததும் பெரும்பாலான இருக்கைகள் காலியானது. பின்னர் மழை பெய்ய ஆரம்பித்ததும் முழுமையாக இருக்கைகள் காலியாகின. இதனால் மேடையில் இருந்த ஓபிஎஸ்ன்  மகன் ரவீந்திரநாத்குமார் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், மழை குறையவே, ஓ.பி.எஸ். பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். இதையடுத்து பொதுக்கூட்டம் தொடங்கியது. ஆனால் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மீண்டும் கனமழை கொட்டத் தொடங்கியதால் தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த மழையில் மிகக் குறைந்த ஆட்களை வைத்து சிறிது நேரம் பொதுக் கூட்டம் நடைபெற்றது.