முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது ,எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு  உள்ளிட்ட காரணங்களை கூறி  தமிழக  பட்ஜெட்டை அதிமுக புறக்கணிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

மகளிர் உரிமை தொகை அறிவிப்பு?

தமிழக அரசு நாளை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது இந்த நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தாக்கல் செய்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற திமுக தனது முதலாவது நிலை அறிக்கையை ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது. அப்போதே தமிழக அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடி அளவிற்கு இருந்தது. இதன் காரணமாக புதிய அறிவிப்புகள் வெளியிடுவதில் திமுக தயக்கம் காட்டி வந்தது. இந்த நிலையில் தனது முதல் முழு நிதி நிலை அறிக்கையை பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் நாளை தாக்கல் செய்கிறார். நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிதி அறிக்கையில் மகளிர் உரிமை தொகையான ரூ. 1000 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதால், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி அரை நிர்வாணம் படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது புகார் எழுந்தது. இந்த புகாரில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் அடுத்தடுத்த இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து 19 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த வாரம் வெளியே வந்த ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் திருச்சியில் கையெழுத்திட்டு வருகிறார்.. இதேபோல திமுக அரசு பதவியேற்றதில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் இரண்டாவது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது. மேலும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியது. 

பட்ஜெட்டை புறக்கணிக்க திட்டம்?

இந்தநிலையில் நாளை நடைபெறவுள்ள சட்ட பேரவை கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது அதிமுக தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் பட்ஜெட் கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேடு, முன்னாள் அமைச்சர் கைது மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர் சோதனைக்கு தங்களது கண்டனத்தை அதிமுக பதிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.