கடந்த 1998 ஆம் ஆண்டு  ஓசூர் அருகே கள்ளச்சாரயத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது பாலகிருஷ்ணா ரெட்டி பங்கேற்றார். அப்போது அவர் பாஜகவில் இருந்தார். அந்தப் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் எறிந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் அதிமுக சார்பில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு ஜெயலலிதாவின் அன்பைப் பெற்று அமைச்சரும் ஆகிவிட்டார்.

இந்நிலையில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குளை விசாரிக்கும் நீதிமன்றம் அந்த பேருந்து தாக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு  எடுத்துக் கொண்டது. அந்த வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு  மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதற்கு கடுமையான பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் ஏற்கனவே ஒரு வழக்கில் உயர்கல்வித் துறை செயலாளரை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கே தமிழக அரசின் மானம் போகிறது என  குறிப்பிட்ட ஸ்டாலின், தற்போது அமைச்சருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தின் மானம் காற்றில்  பறக்கவிடப்பட்டுள்ளது என காட்டமாக  தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தான் ஸ்டாலினுக்கு அதிமுகவினர் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பெரம்பலூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமாருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதே போல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுகவினர் ஓசி பிரியாணி கேட்டும், ஓசி வடை கேட்டும் கடைகளை அடித்து நொறுக்கினர். இது போன்ற பிரச்சனைகளில் எல்லாம் திமுக வின் மானம் போகவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பியூட்டி பார்லர் பெண்ணை திமுக நிர்வாகி அடித்து உதைத்தபோது போகாத மானம் இப்போது போய்விட்டதா என அதிமுகவினர் கூறுகின்றனர்.

பாலகிருண்ணா  ரெட்டியைப் பொறுத்தவரை அநியாயத்தை தட்டிக் கேட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிறுமியைக் கற்பழித்தும், அராஜகம் பண்ணியும் வரும் திமுகவினரின் செயல்களால் உங்கள் மானம் காற்றில் பறப்பது தெரியவில்லையா என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.