அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திரமோடிதான் என்று ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நானும் எடப்பாடிபழனிசாமியும் இதுவரை ஒற்றைத் தலைமை குறித்து பேசியதில்லை, அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டி விட முடியாது. எந்த நேரத்திலும் கட்சி இரண்டாக பிளவுபட்டுவிடக் கூடாது என்பதே என் நிலைப்பாடு. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரைக் கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகம். இன்றைய சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லை. இரட்டை தலைமை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை. எந்தக் காரணத்துக்காகவும்ம் கட்சி இரண்டாக உடையக் கூடாது. எடப்பாடி பழனிச்சாமியுடன் நான் பேச தயார்.

பிரதமர் மோடி வற்புறுத்தியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன். ஜெயக்குமார் பேசியதால்தான் ஒற்றை தலைமை பிரச்சனை பெரிதானது. எந்தவித அதிகார ஆசை கொண்டவன் நான் அல்ல. என்னை தொண்டர்களிடம் இருந்து ஓரங்கட்டவோ பிரிக்கவோ முடியாது. இயக்கத்தில் நான் இருப்பதே தொண்டர்களை காப்பாற்றுவதற்காகதான். துணை முதல்வர் என்ற பதவிக்கு இந்திய அரசியல் சட்டத்தில் எந்தப் பிரத்யேகமான அதிகாரமும் இல்லை, இருந்தாலும் பிரதமர் மோடி ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டதால் ஏற்றுக்கொண்டேன். இதுவரை நல்லாத்தான் போயிட்டு இருக்கு எனக்கே தெரியல எதுக்காக இந்த ஒற்றை தலைமை பிரச்சனை வருதுன்னு, கனவா நனவா என்பது போல இருக்கிறது.” என்று ஓபிஎஸ் குமுறியிருந்தார்.

இந்நிலையில் ஒபிஎஸ்ஸின் பேட்டியை வைத்து கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திரமோடிதான் என்று ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திரமோடி என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
