Asianet News TamilAsianet News Tamil

20 நிமிடம் விடாமல் அடித்த ஆசிரியர்.. படுகாயமடைந்த மாணவன்.. கொதிக்கும் ஓபிஎஸ்..

சீருடை இறுக்கமாகப் போட்டு வந்ததற்காக பள்ளி மாணவனை ஆசிரியர் தொடர்ந்து 20 நிமிடங்கள் அடித்து , காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆசிரியரே ஒழுங்கீனமாகச் செயல்படுவது, மாணவரை சரமாரியாகத் தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
 

ADMK OPS Statement
Author
Kovai, First Published Dec 11, 2021, 7:11 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நாட்டில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், கடந்த ஆறு மாத காலமாக, அதிகாரிகளை மிரட்டுவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, பெண்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடுவது, பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பது என ஒழுக்கக் கேடுகள்தான் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டம், கணபதி நகரைச் சேர்ந்த கலாதரன் என்பவரின் இரண்டாவது மகன் மிதுன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு உயிரியல் பாடப் பிரிவில் படித்து வருகிறார் என்றும், மிகச் சிறந்த கால்பந்து வீரரான இவர் கோவை மாவட்ட அணிக்குத் தேர்வாகி உள்ளதாகவும், மருத்துவத்தில் உள்ள ஆர்வம் காரணமாக நீட் தேர்விற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார் என்றும், கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவனும் பள்ளிக்குச் சென்று வருவதாகவும், அந்த மாணவனுடைய சீருடை சட்டை தளர்வாக இருந்ததன் காரணமாக தளர்வாக இருந்த சட்டையைக் கொஞ்சம் இறுக்கமாக மாற்றி அந்தச் சட்டையுடன் பள்ளிக்குச் சென்றதாக சொல்லபடுகிறது.

ADMK OPS Statement

மாணவனின் சட்டை இறுக்கமாக இருந்ததைக் கண்ட இயற்பியல் ஆசிரியர் அந்த மாணவனை அழைத்து, சட்டை இறுக்கமாக இருப்பதற்கான காரணத்தைக் கேட்டதாகவும், அதற்கு அந்த மாணவன் விரிவாக விளக்கம் அளித்தும் விளக்கத்தில் திருப்தி அடையாத அந்த ஆசிரியர், மாணவனை அறைந்ததோடு சரமாரியாகத் தாக்கியதாகவும், இந்தத் தாக்குதல் பக்கத்து வகுப்பு ஆசிரியர் வந்து கேட்கும் வரை சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்ததாகவும், இதன் காரணமாக அந்த மாணவனின் முதுகு, காது, கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. சினம், பொறாமை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல், கொடிய சொற்கள் ஆகிய நான்கை நீக்கி ஒழுகுதலே அறம் எனப்படுகிறது. இந்த அறச் செயலை மாணவ, மாணவியருக்குக் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கத்தை மீறி, அறம் தவறிச் செயல்படுவது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகும்.

ADMK OPS Statement

சட்டையை இறுக்கமாகப் போடுவது என்பது ஒரு சாதாரண செயல். இதற்கென்று தனி விதி ஏதுமில்லை. ஒருவேளை இறுக்கமாகப் போடுவது ஒழுங்கீனம் என்று கருதினால், அந்த ஆசிரியரே மாணவருக்கு அறிவுரை வழங்கி இருக்கலாம் அல்லது அந்தப் பள்ளி நிர்வாகத்திடமோ, முதல்வரிடமோ, தலைமை ஆசிரியரிடமோ தெரிவித்து இதுகுறித்து ஒரு பொதுவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கலாம். அவ்வாறு செய்யாமல், ஆசிரியரே ஒழுங்கீனமாகச் செயல்படுவது, மாணவரை சரமாரியாகத் தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, சிறார்களும், மாணவ, மாணவியரும் பள்ளிகளில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்துத் தக்க அறிவுரைகள் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios