அதிமுக தலைமைக்கு நாளுக்கு நாள் தலைவலியாக மாறி வருகிறது இன்னும் முழு வடிவத்திற்கு வராத தீபா பேரவை.ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தினந்தோறும் மாலை நேரங்களில் தன்னை சந்திக்க வரும் அதிமுக அதிருப்தி தொண்டர்களிடம் பேசி வருகிறார்.

“உங்களுக்காகவே நான்” என ஜெயலலிதா போன்றே ஏற்ற இறக்கத்துடன் தீபா பேசும்போது, ஆர்ப்பரிக்கிறது ஆதரவாளர்கள் கூட்டம். சென்னையில் இப்படியென்றால், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ‘தீபா பேரவை’ என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சேலத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தக் கூட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.அந்த வகையில் கரூரில் இன்று தீபா பேரவையினர் கூட்டிய கூட்டம் அப்பகுதி அதிமுகவினரை கதி கலங்கச் செய்துள்ளது.

பெரிய அளவில் முன்னேற்பாடுகள் இல்லாமல் குவார்ட்டர், பிரியாணி மற்றும் 500 ரூபாய் பேட்டா இல்லாமல் தானாக கூடிய கூட்டம் என்றால்தான் இந்த அளவுக்கு நடக்கும்.

இதுமட்டுமின்றி நிர்வாகிகள் 100 சதவீதம் சசிகலாவுக்கு ஆதரவு என்ற மாயை உடையும் அளவுக்கு சில முக்கிய நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கரூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் சுப்ரமணியன், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் அதிமுக செயலாளரும் எக்ஸ்.எம்எல்ஏவுமான சவுந்தர ராஜன், பரமத்தி ஒன்றிய முன்னாள் அமைப்பாளர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மேடையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கரூர் மாவட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். கூட்டம் நடைபெற்ற தனியார் திருமண மண்டபம் நிரம்பி வழியும் அளவுக்கு கட்சித் தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

இதனால், கரூர் மாவட்ட செயலாளரும் தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் மிகச்சிறிய மாவட்டம் என்பதால் இந்தக் கூட்டம் குறித்தும் கலந்து கொள்பவர்கள் குறித்தும் முன்கூட்டியே அறிந்துகொண்டு தடுக்காமல் போனது ஏன் என்ற கடுப்பில் அதிமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.