வேலூர் மக்களத் தேர்தலின்போதே பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமாகிவிட்டது. அதிமுக வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு பாஜகவினரை அழைக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் பேசிய மேடைகளில் மட்டுமே நரேந்திர மோடியின் படம் காணப்பட்டது. அதிமுகவின் பிரச்சாரங்கள் எதிலும் பாஜகவின் கொடி இடம் பெறவில்லை. 

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே கூட்டணி கட்சியாக அதிமுகவிற்கு ஒரு சில இடங்களில் வாய்ஸ் கொடுத்துவிட்டு போனார். இப்படி ஒட்டுமொத்தமாக பாஜகவினரை அதிமுகவினர் புறக்கணித்தது பாஜகவினருக்கு கடும்கோபத்தை உண்டாக்கியுள்ளது.
 
இதுபற்றி பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவிடமும், நரேந்திர மோடியிடமும் தமிழக பாஜகவினர் கடிதம் வாயிலாக அதிமுகவினரின் அலட்சியம், புறக்கணிப்பு இவற்றைப்பற்றி புகார் தெரிவித்திருக்கிறார்கள். 

அதிமுகவுடன் கூட்டணியாக இருப்பதால்தான் எடப்பாடியின் ஊழல்களை பாஜக ஆதரிக்க வேண்டியுள்ளது. எனவே அதிமுகவுடனான உறவை நாம் முறித்துக்கொண்டு அதிமுகவை எதிர்த்தால்தான் தமிழகத்தில் தாமரை மலரும் என மாநில நிர்வாகிகள் கையெழுத்துப்போட்டு ஒரு பரபரப்பு கடிதத்தை அகில இந்திய தலைமைக்கு அனுப்பியுள்ளனர். 


 
வேலூர் தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவை எதிர்த்து பாஜக குரல் கொடுக்கும். அத்துடன் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிக சீட்டுகள் கேட்டு அதிமுகவை, பாஜக வலியுறுத்தும். அதிக சீட்டுகள் கிடைக்காவிட்டால் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிடும் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.