தமிழக மக்கள் கடுமையாக எதிர்க்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும். 8 வழிச்சாலை கண்டிப்பாக அமைச்சப்படும் என நிதின் கட்கரியும் பேசி அதிமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்து விட்டனர்.

இந்நிலையில்தான் அக்கூட்டணிக்கு மற்றுமொரு சிக்கல் எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால், சிறுபான்மை மக்களுக்கு, அதிமுக மீது கோபம் வரும் என்பது தெரிந்தாலும், பிரசாரத்தில் அதை போக்கிவிடலாம் என, எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் நினைத்திருந்தனர்.

 பாஜக  நிற்கும் தொகுதிகளில் வேண்டுமானால், சிறுபான்மையினர் ஓட்டுகள் எதிர் கூட்டணிக்கு போகுமே தவிர, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் போக மாட்டார்கள் என, அவர்கள் நம்பினர்.

அந்த நம்பிக்கை, உளவுத்துறை அறிக்கையால் ஆட்டம் கண்டுவிட்டது. தென் மாவட்டங்களில், கணிசமாக இருக்கும் கிறிஸ்துவர்கள், சர்ச்சுகளில் கூட்டம் போட்டு, 'மோடியை தாங்கி பிடிக்கும், அதிமுக கூட்டணிக்கு ஓட்டளிக்கக் கூடாது' என, தீர்மானம் போட்டு வருகின்றனர். 

இதே போன்ற தீர்மானத்தை, பள்ளிவாசல் தொழுகைக்கு பின்னர், முஸ்லிம்களும் எடுத்து வருவதாக உளவுத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில், அமைச்சர் செல்லுார் ராஜு, நாமக்கல்லில், அதிமுக வேட்பாளர் காளியப்பன் என, பலரும் மசூதிகளுக்கு ஓட்டுக் கேட்க சென்ற போது, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

தங்கள் ஆட்சிக்கு பாதுகாப்பு அளித்த பாஜகவாலேயே தற்போது  ஆட்சியை இழக்க காரணமாகி விடுமோ என்ற பதற்றம் இருந்தாலும், பாஜகவுக்கு எதிரான சிறுபான்மையினரின் அம்புகள், தன் மீது தைக்காமல் தடுக்க, அக்கட்சி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில்தான் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் முஸ்லிம் பிரமுகர்களையும், நிர்வாகிகளையும் அழைத்து, 'முஸ்லிம்களை சமாதானப்படுத்துங்கள். மசூதிகள், பள்ளிவாசல்களுக்கு செல்லுங்கள்' என, கேட்டுக் கொண்டுள்ளனர். 

காலத்தின் கட்டாயத்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளை, அதிமுக ஏற்கவில்லை. ஜெ., ஆட்சியில் தான், முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் தரப்பட்டன; நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது; உலமாக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன; 'ஹஜ்' செல்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. இதையெல்லாம் ஞாபகப்படுத்தி, முஸ்லிம் ஓட்டுகளை திரும்ப கொண்டு வாருங்கள்' என, முதமைச்சர்  பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து அதிமுக , சிறுபான்மை பிரிவு செயலர் அன்வர் ராஜா, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை விட்டு விட்டு, இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதியான ஆம்பூரில் முகாமிட்டு, முஸ்லிம்களுடன் பேசி வருகிறார்.

இடைத்தேர்தல் நடக்கும் ஏனைய தொகுதிகளுக்கும், முஸ்லிம் தலைவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு சாதகமான கிறிஸ்துவ ஆயர்கள், முக்கியஸ்தர்கள் மூலமாக அந்த மதத்தினரின் கோபத்தை தணிக்கும் திட்டமும் செயலுக்கு வந்திருக்கிறது.

மத்தியில் மீண்டும், பா.ஜ ஆட்சி வரவிடக் கூடாது என்பதில், சிறுபான்மையினர் உறுதியாக இருப்பதாக தெரிந்தால், 'லோக்சபா தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்; ஆனால், சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கண்டிப்பாக, இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்' என்ற கோஷத்தை இறுதி அஸ்திரமாக பயன்படுத்த, அதிமுக முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்துக்கு பாஜக முக்கிய நிர்வாகிகள் கூட அரை மனதுடன் ஒத்துக் கொண்ட நிலையில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக மீது செம கடுப்பில் உள்ளனர்.