ஜெயலலிதா இருக்கும் வரை அ.தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நான் நீ என்று கடும் போட்டி நிலவும். போட்டியிட சீட் வாங்கிவிட்டால் போதும் வெற்றி பெற வைப்பதுமாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் பொறுப்பாகிவிடும். இதனால் சாமான்ய தொண்டன் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை எம்.எல்.ஏ., எம்.பி சீட்டுகளை பெற போயஸ் கார்டன் வாசலில் காத்துக் கிடப்பார்கள்.
 
   ஆனால் இது எல்லாம் ஜெயலலிதா இருந்த வரை தான். கடந்த ஆர்.கே.நகர் தேர்தலின் போது அங்கு போட்டியிட மதுசூதனன் – பாலகங்கா இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் ஓ.பி.எஸ் ஆதரவாளரான மதுசூதனனுக்கு சீட் கிடைத்தது. இதனால் பாலகங்கா மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளடி வேலை பார்த்து மதுசூதனனை கவிழ்த்தனர்.


 
   அதுமட்டும் இல்லாமல் ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் அமைச்சர்கள் யாரும் தங்கள் சொந்த பணத்தை செலவிடவில்லை. இதனால் தான் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கூட அ.தி.மு.க சார்பில் அங்கு போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. விருப்ப மனு பெறுவதற்கு மாவட்டச் செயலாளரும்  அமைச்சருமான காமராஜ் தனது சொந்த பணத்தை செலவு செய்து ஆட்களை கூட்டி வந்தார்.
 
   இதே நிலை தான் தற்போதும் அ.தி.மு.கவில் நீடிக்கிறது என்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் அ.தி.மு.க கூட்டணி தொடர்பாக பல்வேறு தகவல்களை தங்கள் கட்சிக்குள் உலவ விட்டு வருகிறார்கள். அதில் ஒன்று அ.தி.மு.க தலைமையில் பிரமாண்ட கூட்டணி என்று. ஆனால் பா.ஜ.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து பெரிய அளவில் ஒன்றும் சாதிக்க முடியாது என்பது தான் அந்த கட்சியின் நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது.


 
   எனவே தான் தேர்தலில் போட்டியிடவும் அ.தி.மு.கவில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. வழக்கமாக விருப்ப மனு தாக்கல் அறிவிக்கப்பட்டால் உடனடியாக தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் டிரய்னோ, பஸ்ஸோ ஏறி வந்து சென்னையில் முகாமிட்டு, வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு தான் சொந்த ஊர் திரும்புவார்கள். ஆனால் விருப்பு மனு வரும் திங்கள் முதல் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது வரை எந்த மாவட்டத்தில் இருந்தும் கட்சிக்காரரகள் புறப்படவில்லை.
 
   இதனால் திங்களன்று விருப்ப மனு வாங்க அ.தி.மு.கவினர் வருவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தேர்தலில் நின்றால் செலவழிக்கப்போவது யார்? எவ்வளவு பட்ஜெட் என்கிற விவரத்தையும் அ.தி.மு.க தற்போது வரை யாருக்கும் தெரிவிக்காமல் உள்ளது. இதனால் தற்போது எம்.பியாக இருப்பவர்கள் கூட மீண்டும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடலாமா? என்று யோசனையில் தான் உள்ளார்களாம்.


 
   எனவே மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் திங்களன்று விருப்ப மனு கட்ட ஆட்களை தற்போது முதலே பிடிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் தற்போது எம்பியாக உள்ள அனைவரும் கட்டாயமாக விருப்ப மனு வழங்க வேண்டும் என்கிற உத்தரவும் ரகசியமாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.