தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசிய சம்பவம்  நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது.

அரசியல் தலைவர்கள் எக்குத்தப்பாக  பேசி  நெட்டிசங்களிடம் சிக்கி சின்னாபின்னமாவது சமீப காலமாக நடந்துவருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேக்கிழார் கம்பராமாயணத்தை எழுதினார் என  கூறி நெட்டிசன்களிடம் கலாய்ப்புக்கு உள்ளாக்கினார். அதைவிட ஒரு படி மேலே போன அமைச்சர் கருப்பணன் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதனால் தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகின்றது என்ற தாறுமாறான கருத்தைகூறி நெட்டிசன்களுக்கு கலாய்க்க வேலையை கொடுத்தார்.

இப்போது நெட்டிசங்களின் செல்லப்பிள்ளைகளின் லிஸ்டில் இணைந்துள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன்,  நேற்று ராஜ்யசபாவில், மாண்புமிகு பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று கூறி தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார். முதல்வர் என்பதற்கு பதில் பிரதமர் என்று அவர் கூறிவிட்டார். 

இதையடுத்து அவை உறுப்பினர்கள், முதல்வர் என்று அவரை திருத்தினார்கள். பின் அவர் முதல்வர் என்று மாற்றி கூறினார். அவரது பேச்சால் அவையில்  சலசலப்பு ஏற்பட்டது, எம்.பி நவநீதகிருஷ்ணன் பேச்சால் அங்கு இருந்த பாஜக எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர் ஏற்கனவே பியூட்டிபுல் காஷ்மீர் பாடல் பாடி புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.