கொடைரோடு அருகே உள்ள ஜங்கிள்பட்டி ரயில்வே லெவல் கிராசிங்கில் நேற்று,  திண்டுக்கல்  - மதுரை பயணிகள் ரயில்வந்த போது, அங்கு பணியாற்றும்  ஊழியர் மணிமாறன்,  ரயில்வே கேட்டை அடைத்து ரயில் செல்ல அனுமதித்து காத்திருந்தார்.

அப்போது அந்த வழியே காரில் வந்த அதிமுக எம்பி உதயகுமார், கேட்டை திறக்கும்படி மணிமாறனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ரயில் மோதி விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் கேட்டை திறக்க மணிமாறன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  எம்.பி. உதயகுமார் மற்றும் ஆதரவாளர்கள் மணிமாறனை தாக்கியதாக கூறப்படுகிறது.  இதை கண்டித்து, சக கேட்கீப்பர்கள், ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மதுரை வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட பின் இயக்கப்பட்டன.  தென்மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.


இந்த நிலையில், கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி, எம்பி உதயகுமார்,  அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மணிமாறன் தாக்கியதில்  தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, அவர் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.