முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி இந்த மாதம் முதல் ஆளும்கட்சி, எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய சம்பளமும், எதிர்க்கட்சியினருக்கு, பழைய சம்பளமும் வழங்கப்பட உள்ளது.

தமிழக எம்எல்ஏக்களின்  மாத சம்பளம், 55 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம், 12 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாகவும்; குடும்ப ஓய்வூதியம், 10 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

மேலும் எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, 2 கோடி ரூபாயில் இருந்து, 2.50 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் கடந்த ஆண்டு  ஜூலை, 19ல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு, நடைமுறைக்கு வந்தது.

ஆனால் இது வரை எம்எல்ஏக்களின்  புதிய சம்பளம்  குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த மாதம் முதல், அதிமுக  எம்எல்ஏக்களுக்கு  புதிய சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்  எட்டு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

ஆனால் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை, எம்எல்ஏ  தினகரன் ஆகியோர், தங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம் என, எழுதிக் கொடுத்தனர்.அதன் காரணமாக, அவர்கள் அனைவருக்கும், புதிய சம்பளம் வழங்கப்படாமல், பழைய சம்பளமே வழங்க உத்தரவாகி உள்ளது.

சம்பள உயர்வு வேண்டாம் எனக்கூற எந்த எம்எல்ஏவுக்கும் அதிகாரம் கிடையாது .  அவர்கள் சம்பளத்தை விட்டுத் தருகிறேன் என்று தான் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்படி, டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார், அதை ஏற்றுக் கொண்ட நிதித்துறை அவருக்கு பழைய சம்பளமே வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை  போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, சம்பள உயர்வு வேண்டாம் என எழுதி, ஒரே கடிதத்தில்கையெழுத்து போட்டக்  கொடுத்துள்ளனர். இதனை நிதித்துறை ஏற்கவில்லை.

ஒவ்வொருவரும் தனித்தனியாக, சம்பளத்தை விட்டுத் தருவதாக, கடிதம் அளிக்க வேண்டும். தொழிலாளர் பிரச்னை தீரும் வரை என்றால், அதற்கான காலவரையறை என்ன என்ற, கேள்வி எழுந்துள்ளது. எனவே இது குறித்து திமுகவிடம் நிதித்துறை விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பான பஞ்சாயத்து முடியும்வரை திமுக எம்எல்ஏக்களுக்கு பழைய சம்பளமே தரப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.